• Wed. Apr 24th, 2024

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது: சீமான் குற்றச்சாட்டு

Seeman

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படாதது விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் இந்த ஆண்டு கரும்பு வழங்கப்படாது என்ற திமுக அரசின் அறிவிப்பால் செங்கரும்பினை விளைவித்த கரும்பு விவசாயிகள் மிகுந்த நட்டமடையும் நிலைக்கு ஆளாகியுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அரசு கொள்முதலை நம்பி கரும்பினை விளைவித்த விவசாயிகளை வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்ப் பேரினத்தின் ஒற்றைத் தேசியத் திருவிழாவான பொங்கல் விழாவினை சீரும் சிறப்புமாக கொண்டாட வேண்டிய அளவிற்கு மக்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் உயர்த்தாமல் ஒவ்வொரு ஆண்டும் இலவச வேட்டி, சேலை முதல் பொங்கல் வைப்பதற்கு தேவைப்படும் பொருட்கள் வரை இலவசமாக கொடுத்தால்தான் கொண்டாட முடியும் என்ற வறுமை நிலையில் தமிழ் மக்களை வைத்திருப்பதுதான் அறுபது ஆண்டுகாலமாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் திராவிட கட்சிகள் ஏற்படுத்திய வளர்ச்சி, செய்த சாதனை, ஏற்படுத்திய வாழ்வியல் முன்னேற்றமாகும்.
இந்நிலையில் கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் ஒழுகும் வெல்லம், காய்ந்த கரும்பு, புளியில் பல்லி, பூச்சியரித்த முந்திரி என்று தரமற்ற பொருட்களை கொடுத்து திமுக அரசு செய்த முறைகேடுகளால் பொதுமக்களிடத்தில் கடும் விமர்சனத்திற்கு ஆளானது. தவறை திருத்திக்கொண்டு தரமான பொருட்களை மக்களுக்கு வழங்க நிர்வாகத் திறனற்ற திமுகவின் திராவிட மாடல் அரசு, இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு பொருட்களுக்கு பதிலாக குடும்பத்திற்கு, 1000 ரூபாய் என மக்களின் வரிப்பணத்தையே மீண்டும் அவர்களுக்கு கொடுப்பதாக
அறிவித்துள்ளது.
இதனால் கடந்த பல ஆண்டுகளாக பொங்கல் தொகுப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட அரசு கரும்பு கொள்முதலை நம்பி, லட்சக்கணக்கான ஏக்கரில் கரும்பினை விளைவித்த விவசாய பெருமக்கள் மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அடைந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *