“இன்று நான் சைவம், அசைவ கேள்வி என் உடம்புக்கு ஆகாது” என சீமான் குறித்த கேள்விக்கு கவிஞர் வைரமுத்து பதிலளித்தார்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் மாநகராட்சி பூங்காவில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதன் பின் செய்தியாளர்களிடம் கவிஞர் வைரமுத்து பேசுகையில், ”கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு இந்த ஆண்டு வெள்ளிவிழா கொண்டாடுவதால் திருவள்ளுவருக்கு பொன்னாண்டு. பிரதமர் மோடி 70 நாடுகள் கூடியிருந்த பேரவையில், திருவள்ளுவர் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, உலகம் முழுவதும் திருக்குறள் பரப்பப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதற்கு, வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எந்த தனி மதமும் அதை சொந்தம் கொண்டாட முடியாது. திருக்குறளை உலகப் பொதுமறை என்று ஏற்றுக்கொண்டு பிரதமர் அறிவிக்க வேண்டும். ஜனவரி 2 திருக்குறள் உரை எழுத தொடங்கி விட்டேன். உள்ளுக்குள் நுழைந்த பொருளுக்குள் புகுந்து அறிவுக்குள் விரிந்து எழுதுகிறேன். காணாத திருக்குறள், கேளாத திருக்குறள், வாசிக்காத திருக்குறளை இளைஞர்கள் மத்தியில் இந்த உரை சேர்க்கும் என நம்புகிறேன்” என்றார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்த கேள்விக்கு, “இன்று நான் சைவம், அசைவ கேள்வி என் உடம்புக்கு ஆகாது” என கவிஞர் வைரமுத்து பதிலளித்தார்.