• Thu. Apr 18th, 2024

பிளாஸ்டிக் கழிவு உருவாக்கம் 5 ஆண்டுகளில் இரு மடங்காக்கும்

பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரிப்பது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அஷ்வினி சவுபே பதிலளித்தார். அப்போது அவர், “இந்தியாவின் பிளாஸ்டிக் கழிவு உருவாக்கம், கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 21.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது” என்று பிளாஸ்டிக் கழிவுகள் உருவாக்கம் தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டு பேசியுள்ளார்.

மேலும், “2019-20ஆம் ஆண்டில் 34 லட்சம் டன்கள் பிளாஸ்டிக் கழிவுகளும், 2018-19ஆம் ஆண்டில் 30.59 லட்சம் டன்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 2015-16ஆம் ஆண்டில் 15.89 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது”என்று தெரிவித்துள்ளார். அத்துடன் பயோ மெடிக்கல் கழிவுகள் குறித்த மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் தினமும் 677 டன் பயோ மெடிக்கல் கழிவுகளை உருவாக்கியதாகவும், 2019இல் ஒரு நாளைக்கு 619 டன் சேர்ந்ததாகவும் கூறினார். 2015ஆம் ஆண்டில், இந்த கழிவுகள் ஒரு நாளைக்கு 502 டன்கள் என்ற அளவில் இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் பயோ மெடிக்கல் கழிவுகளை அறிவியல் பூர்வமற்ற அல்லது சட்டவிரோதமாக அப்புறப்படுத்துவது குறித்து பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அஷ்வினி சவுபே, “மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை மொத்தம் 23 பொது புகார்களைப் பெற்றுள்ளது. ராஜஸ்தானில் இருந்து ஐந்து, டெல்லியில் இருந்து நான்கு, தமிழகத்தில் இருந்து மூன்று, ஜார்க்கண்டிலிருந்து இரண்டு மற்றும் பிகார், பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, மேற்கு வங்காளம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒரு புகார் பெறப்பட்டிருக்கிறது”என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், பிளாஸ்டிக் தடையை சென்னை மாநகராட்சியில் தீவிரமாக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. திடீர் ஆய்வு, சோதனை மேற்கொள்ளவும் பிளாஸ்டிக் பயன்படுத்தும் நிறுவனம், கடைகளுக்கு சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை கொண்டு சேர்த்து பிளாஸ்டிக் எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *