சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சி.,யின் நினைவு நாளை தியாகத் திருநாளாக அறிவிக்க வேண்டும். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆங்கிலேயரை எதிர்த்து சுதேசி கப்பல் இயக்கிய, சுதந்திரப் போராட்ட தியாகி, தேசத் தலைவர், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 89வது நினைவு நாள் குருபூஜை ஓட்டப்பிடாரத்தில் அவர் வாழ்ந்த வீடு அருகில் நடந்தது. விழாவில், பெருங்குளம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச சத்தியஞான தேசிய பரமாச்சார்ய சுவாமிகள் ஆசி வழங்கினார். அமைப்பின் பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.கே.ரகுராம் நோக்க உரை வழங்கினார். அனைத்துலக முதலியார்கள் வேளாளர்கள் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம், விரைவில் கட்டப்பட்ட உள்ள வ.உ.சி., மணி மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டி தலைமை உரை ஆற்றினார்.
- தியாகத் திருநாள்

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க (எய்ம்பா) அமைப்புத் தலைவர் ஓம்சக்தி ராமச்சந்திரன், விழாவில் நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்துப் பேசியதாவது; நெருக்கடியான சூழலில் விழா நடக்க அனுமதித்த முதல்வர், காவல்துறை, நீதித்துறைக்கு நன்றி. அவர் பிறந்த மாவட்டமான தூத்துக்குடி விமான நிலையத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான கப்பல் ஒன்றுக்கும், கப்பல் ஒட்டிய முதல் தமிழன் வ.உ.சி.,யின் பெயர் சூட்ட வேண்டும். 8 மற்றும் 12ம் வகுப்பு பாடத்தில் வ.உ.சி.,யின் வாழ்க்கையைப் பாடமாக வைக்க ஆவண செய்ய வேண்டும். அவருக்கு கட்டப்படவுள்ள மணி மண்டபத்திற்கான உரிய உதவிகளை அரசு செய்ய வேண்டும். வ.உ.சி.,யின் பிறந்தநாளை தியாகத் திருநாளாக அறிவிக்க வேண்டும். வ.உ.சி.,க்கு பாரத ரத்னா விருது வழங்குவதோடு, பாராளுமன்ற வளாகத்தில் வ.உ.சி.,க்கு சிலை வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில் அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், கீதாஜீவன் கலந்து கொண்டு வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வாரிசுகளுக்கு மரியாதை செய்து, சிறப்புரையாற்றினர். சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், ‘வ.உ.சி., குருபூஜை மலரை’ வெளியிட, அனைத்துலக முதலியார் பிள்ளைமார் சங்கத் தலைவர் செவாலியர் அருணாசலம் முதலியார் பெற்றுக் கொண்டார். முனைவர் அரசு பரமேஸ்வரன், அனிதா கிருஷ்ணமூர்த்தி வ.உ.சி., குறித்த புகழுரை வழங்கினர்.
பா.ஜ.க., மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், செங்குந்தர் மகாஜன சங்க மாநிலத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ், எய்ம்பா பொருளாளர் எம்.ரவி முதலியார், செயலாளர்கள் வேலம்மாள், நித்தியகுமார், மாநில துணைத்தலைவர் ராமச்சந்திர குமார், சைவப் பேரவை தலைவர் லட்சுமணன், சட்டமன்ற உறுப்பினர்கள் கடம்பூர் ராஜூ, சண்முகையா, கிருஷ்ணமுரளி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன், சுந்தரராஜ், சின்னப்பன் உட்பட சமுதாய தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.






; ?>)
; ?>)
; ?>)
