• Fri. Apr 26th, 2024

பெட்ரோல், டீசலை ,ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர தயார் – மந்திரி பேட்டி

மாநில அரசுகள் சம்மதித்தால், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர தயார் என்று பெட்ரோலியத்துறை மந்திரி கூறினார்.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்படுமா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு ஹர்தீப்சிங் பூரி கூறியதாவது:- பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது. ஆனால் அதற்கு மாநிலங்கள் சம்மதிக்க வேண்டும். மாநிலங்கள் சம்மதித்தால், அதை செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால், மாநிலங்கள் சம்மதிக்க வாய்ப்பில்லை. இதை புரிந்து கொள்வது ஒன்றும் கஷ்டம் இல்லை. மதுபானம், எரிபொருட்கள் ஆகியவற்றில் இருந்து மாநிலங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. நல்ல வருவாய் கிடைக்கிறது என்றால், அதை யாரும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். பணவீக்கம் பற்றி மத்திய அரசு மட்டுமே கவலைப்படுகிறது. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது பற்றி கடைசியாக லக்னோவில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்குமாறு கேரள ஐகோர்ட் யோசனை தெரிவித்தது. ஆனால், அந்த மாநில நிதிமந்திரி ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த ஓராண்டில் பெட்ரோலிய பொருட்கள் விலை குறைவாக உயர்த்தப்பட்டது இந்தியாவில்தான். வடஅமெரிக்காவில் ஓராண்டில் 43 சதவீதம் விலை உயர்த்தப்பட்டது. ஆனால், இந்தியாவில் வெறும் 2 சதவீதம் மட்டுமே அதிகரித்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *