மதுரை மாவட்டம் சோழவந்தானில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கல்வி வியாபாரம் ஆன்மீகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக சோழவந்தான் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமப் பகுதிகளில் இருந்து தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சோழவந்தான் நகருக்குள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் சோழவந்தானில் முக்கியமான இடங்களில் அரசியல் கட்சியினர் சமூக அமைப்புகள் உள்ளிட்ட பலர் ஆபத்தான நிலையில் பிளக்ஸ் பேனர்களை வைப்பதால் பொதுமக்கள் மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக ஜெனகை மாரியம்மன் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதி தென்கரை வைகை ஆற்று பாலம் பகுதி வட்ட பிள்ளையார் கோவில் பகுதி காமராஜர் சாலை பகுதி பேருந்து நிலையம் பகுதி உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் அதிக அளவு உயரம் உள்ள பிளக்ஸ் பேனர்களை வைப்பதால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாக பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தங்களின் இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கு ப்ளக்ஸ் பேனர்கள் வைப்பவர்கள் ஒரு வாரத்திற்கு மேல் பேனர்களை அகற்றாமல் இருப்பதால் போக்குவரத்திற்கு கடும் இடையூறாக இருப்பதாக கூறுகின்றனர். மேலும் அரசு பெண்கள் பள்ளி அருகில் அதிகளவு பேனர்களை வைப்பதால் மாணவிகளின் கல்வித்திறன் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் பேனர்களில் உள்ள புகைப்படங்களால் மாணவிகள் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் பெற்றோர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும் பேனர்களில் உள்ள வாசகங்கள் மற்றும் புகைப்படங்களை பார்த்தவாறு செல்லும் வாகன ஓட்டிகள் இதன் காரணமாக விபத்தில் சிக்கி படுகாயம் அடைவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலர் சமூக வலைதளங்கள் மூலம் கண்டனங்கள் தெரிவித்த பின்பும் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. ஆகையால் இதனை கட்டுப்படுத்தும் நோக்கமாக முள்ளி பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த முள்ளை சக்தி மற்றும் பொதுமக்கள் சிலர் இதுகுறித்து சோழவந்தான் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இடையூறாக உள்ள பிளக்ஸ் பேனர்கள் வைப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் மற்றும் நிகழ்ச்சி முடிந்தவுடன் பேனர்களை அகற்ற காவல்துறை மூலம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட பேரூராட்சி அலுவலர்கள் இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளுடன் கலந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளதாக மனு அளித்தவர்கள் கூறினர்.








