• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மதுரையை ஆட்சி புரிந்த பீட்டர் பாண்டியனும்… மீனாட்சி அம்மன் மீதான இறை நம்பிக்கையும்… – ஒரு வரலாற்றுத் தொகுப்பு…

ByKalamegam Viswanathan

Aug 7, 2026

மதுரை அரிய பல வரலாற்றத் தடங்களை பல்வேறு காலகட்டங்களில் கடந்து சென்றுள்ளது. இவையெல்லாம் வரலாற்றுக்கு முந்தைய ஆண்டுகளிலிருந்து தொடங்கி இன்று வரை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுபோன்ற நெகிழ்ச்சியான வரலாற்று நூலில் பீட்டர் பாண்டியன் என்ற ஆங்கிலேயே ஆட்சியரின் பக்கங்களும் உள்ளன. அதுகுறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு. 

கையசைத்த அந்த சிறுமி யார்?

இரவு நேரம். அன்றைக்கு அப்படியொரு பேய் மழை. தன்னுடைய அறைக்குள் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார் அந்த வெள்ளைக்கார துரை. அப்போது ஜன்னலுக்கு வெளியே திடீரென்று ஒரு உருவம் தெரிகிறது. பச்சை நிறத்தில் உடை அணிந்த சிறுமி. வெள்ளைக்கார துரையை கையசைத்து அழைக்கிறாள். அவரும் எழுந்து அறைக்கு வெளியே தாழ்வாரத்தில் நடந்து சிறுமி அழைத்த திசை நோக்கிச் செல்கிறார். வெளியே உள்ள வாசல் கதவு அருகே வந்தபோது திடீரென பெரும் சத்தம். துரை திரும்பிப் பார்த்தபோது, அவரது வீடு மொத்தமாய் இடிந்து விழுந்து தரைமட்டமாயிருந்தது.

அதிர்ச்சியில் உறைந்து நின்ற அவர், மீண்டும் திரும்பி சிறுமி சென்ற வழியைப் பார்க்கிறார். அங்கே அந்த சிறுமி இல்லை. அவருக்குப் புரிந்துவிட்டது. தன்னைக் காப்பாற்றியது மதுரை அரசாளும் அன்னை மீனாட்சிதான் என்பது. அந்த வெள்ளைக்காரத் துரை வேறு யாருமல்ல, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1812 முதல் 1828 வரை மதுரையின் ஆட்சியராகத் திகழ்ந்த ரோஸ் பீட்டர். மக்களின் இன்ப துன்பங்களில் முக்கியப் பங்காற்றிய ரோஸ் பீட்டர், மக்களின் ஆட்சியராகத் திகழ்ந்தார். அதனாலேயே மதுரை மக்கள், இவரை ‘பீட்டர் பாண்டியன்’ என்ற பெயரால், பாண்டிய மன்னனுக்கு நிகரான தகுதியை வழங்கி அழைத்து மகிழ்ந்தனர்.

பீட்டர் பாண்டியன்

தனது மொழி, பண்பாடு, சமயம் வேறாக இருந்தபோதும்கூட, மதுரை மக்களின் இறை நம்பிக்கையான மீனாட்சி அம்மனை ரோஸ் பீட்டரும் மனதார ஏற்றுக் கொண்டு வணங்கி மகிழ்ந்தார். மதுரையை ஆண்ட அங்கயற்கண்ணி மீனாட்சி மீது அளவற்ற இறை பற்றும், நம்பிக்கையும் கொண்டு திகழ்ந்தார். மேலே சொல்லப்பட்ட சம்பவம் என்பது உண்மையோ புனைவோ தெரியாது. ஆனால், இன்றைக்கும் மதுரை மக்களின் செவி வழிச் செய்தியாகவே இக்கதை இருந்து வருகிறது. இந்த பீட்டர் பாண்டியன், மீனாட்சி அம்மனுக்காக வழங்கிய ‘பாத அங்கவடி’ இன்றைக்கும் மீனாட்சி கோவிலுக்குள் வாழும் சாட்சியமாய் திகழ்கிறது.

பல லட்சம் மதிப்பு மிக்கது

இன்றைய மதிப்பில் பல லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள இந்த அங்கவடி, சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த முறை ஆடி முளைக்கொட்டுத் திருவிழாவின் 8ஆம் நாளில் மீனாட்சியின் காலில் பொருத்தப்பட்டிருந்ததை, ஆன்மீக அன்பர்களும், ஆய்வாளர்களும் பெரிதும் வரவேற்றுள்ளனர். 211 சிவப்புக் கற்கள், 36 மரகரக் கற்கள், 40 பலச்ச வைரம், 2 முத்து, 2 நீலம், 2 வைடூரியம் என மொத்தம் 27-12-0 தோலா எடை கொண்டது. 27 தோலா 12 மாஷா 0 குன்றி என்பது இதன் விளக்கம். 1 தோலா என்பது 11.664 கிராம். 1 மாஷா 0.972 கிராம். அதாவது இன்றைய எடை மதிப்பில் சுமார் 323.79 கிராம் ஆகும். 

புதுப்பித்துக் கொள்ளும் மாநகரம்

‘நாம் தொலைத்த மதுரை வீதிகள்’ என்ற நூலின் ஆசிரியர்களுள் ஒருவரான தமிழினியாள் இதுகுறித்து கூறுகையில், ‘மதுரை நீண்ட நெடிய வரலாறு கொண்ட மண். இதற்குப் பல பெருமைகள் உண்டு. எத்தனையோ படையெடுப்புகளுக்கு ஆளானாலும், சங்க காலத்திலிருந்து தற்போது வரை தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் மாநகரமாகத் திகழ்கிறது. இரவும் பகலும் தொடர்ந்து இயங்குகின்ற உலகின் வெகு சில நகரங்களுள் மதுரையும் ஒன்று. கடந்த 1812களில் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ரோஸ்பீட்டர், மீனாட்சி மீது அளவு கடந்த பக்தியும் நம்பிக்கையும் கொண்டவர்.

ஆடிமுளைக் கொட்டு

தன் வீடு இடிந்தபோது சிறுமியாய் வந்து தன்னைக் காப்பாற்றியது மீனாட்சிதான் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்றாலும், மீனாட்சி அம்மனுக்கு அங்கவடிகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார். இந்த அங்கவடிகள் விலை மதிப்பற்ற பொருட்களால் ஆனவை. இதனை ஒவ்வொரு ஆடி முளைக்கொட்டுத் திருவிழாவின்போது மீனாட்சிக்கு அக்குறிப்பிட்ட அங்கவடிகள் அணிவிக்கப்படுவது வழக்கம். சில ஆண்டுகளாக இல்லாமலிருந்த நிலையில், இந்த ஆண்டு அதனை கோவில் நிர்வாகம் அணிவித்திருந்தது பொதுமக்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக கோவில் நிர்வாகத்திற்கு நன்றி’ என்றார்.

செயின்ட் ஜார்ஜ் தேவாலயம்

பீட்டர் பாண்டியன் என்ற ரோஸ் பீட்டரும், மதுரை மாநகரை தற்போதுள்ளதைப் போன்று விரிவாக்கம் செய்த பிளாக்பர்ன் என்ற ஆட்சியரும் மதுரை மக்கள் இப்போதும் போற்றிக் கொண்டாடும் ஆங்கிலேய அதிகாரிகளாவர். தெற்கு ஆவணி மூல வீதி மற்றும் மேல ஆவணி மூல வீதி சந்திப்பில் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலய தாழ்வறையில் ரோஸ் பீட்டரின் கல்லறை அமைந்துள்ளது. பிரிட்டனின் கார்ன்வால் மாவட்டத்தில் உள்ள ஹார்லி என்ற இடத்தில் 1785ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் நாள் பிறந்த ‘ரோஸ் பீட்டர்’, கடந்த 1828ஆம் ஆண்டு, மதுரையில் ‘பீட்டர் பாண்டியனாக’ ஆகஸ்ட் 6ஆம் நாள் காலமானார்.