• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குற்றாலம் அருவிகளில் இன்று முதல் குளிக்க அனுமதி

Byமதி

Dec 20, 2021

குற்றாலம் அருவிகளில் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய பொதுமக்கள் குளிக்க இன்று முதல் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் சீசன் காலங்களாகும். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் கொட்டும். இந்த சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருவார்கள். தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் குற்றாலத்துக்கு வந்து சீசனை அனுபவித்து செல்வார்கள்.இதனால் குற்றாலம் மட்டுமின்றி அதன் அருகில் உள்ள தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரம் களை கட்டும்.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா ஊரடங்கால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று மிகவும் குறைந்துள்ள நிலையில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு விட்டது.
தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்து வருகிறது. இதனால் சீசனுக்கு செல்ல முடியாத நிலையில் தற்போது அருவிகளில் விழும் தண்ணீரில் குளித்து செல்ல சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அதன் அழகை ரசித்துவிட்டு ஏக்கத்துடன் சென்று விடுகிறார்கள்.

எனவே பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று குற்றாலம் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, டிசம்பர் 20ம் தேதி முதல் குளிக்க அனுமதி அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், குற்றாலம் அருவிகளில் இன்று முதல் குளிக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.