தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில், ஜி.எஸ்.டி. சாலையை ஒட்டி அமைந்துள்ள நூற்றாண்டுகளைக் கடந்து விளங்கி வரும் இரணியம்மன் கோவில், அப்பகுதி மக்களின் குல தெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் திகழ்கிறது.

தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதால், கோவில் முன்புற சாலையில் தொடர்ந்து நெரிசல் நிலவுகிறது.
குறிப்பாக, கோவில் சாலையோரமாக இருப்பதே ஜி.எஸ்.டி. சாலை விரிவாக்கப் பணிகளை தடை செய்து வருகிறது. இதையடுத்து சாலை விரிவாக்கம் நடக்கும்படி கோவிலை பின்புறம் தள்ளி அமைக்க, அப்பகுதி கிராம மக்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதற்காக கோவில் பின்புறத்தில் உள்ள தனியார் நிறுவனத்திடம் 21 சென்ட் நிலம் பெற்றுத்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், தனியார் நிறுவனம் 21 சென்ட் நிலத்திற்கு பதிலாக 10.4 சென்ட் நிலம் மட்டுமே தானமாக வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால், கோவில் நிலம் மாற்றம் மற்றும் சாலை விரிவாக்க நடவடிக்கைகள் நீண்டநாள் தீர்வின்றி தாமதிக்கின்றன.
இந்த நிலைமையை கண்டித்து, கோவிலுக்கு நிரந்தரமாக 21 சென்ட் நிலம் வழங்க வேண்டும் என்பதையும், கோவில் பின்புறம் இருந்த 38 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் 2004க்கு பிறகு தனியார் நிறுவனத்துக்குப் பட்டா அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் கேள்வி எழுப்பி, பொதுமக்கள் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இரணியம்மன் கோவில் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பட்டா அளிப்பில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் என்றும், கோவிலுக்கு தேவையான முழு நிலமும் உடனடியாக ஒதுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் என்ன தீர்வு வழங்குகின்றன என்பது தற்போது பெருங்களத்தூரில் பேசுபொருளாக உள்ளது.








