

தனியார் முதலீட்டு நிறுவனத்தின் மீது பொய் வழக்கு பதிவு செய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் கோவை எல் அண்ட் டி பைபாஸ் பகுதியில் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
MYV3Ads என்ற தனியார் ஆன்லைன் செயலி நிறுவனத்தினர் பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்வதாக கொடுக்கப்பட்ட புகாரை அடுத்து அந்த நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கு அந்த நிறுவனத்தின் மூலம் மாதந்தோறும் நிலையான வருவாய் பெரும் மக்களும், நிறுவனத் தரப்பும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக முதலீட்டாளர்கள் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க திட்டமிடப்பட்டது.
ஆனால், 50 லட்சம் மக்கள் முதலீடு செய்துள்ள நிலையில் அதிக அளவில் மக்கள் கூடுவார்கள் என்பதை உணர்ந்த தனியார் நிறுவனத்தார் தங்கள் முதலீட்டாளர்களைக் கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் திரள அறிவுறுத்தினர்.

அதன்படி இன்று காலை முதல் பைபாஸ் சாலையில் மக்கள் தொடர்ந்து குவிந்தவண்ணம் உள்ளனர். லட்சக்கணக்கானோர் முதலீடு செய்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் பேருந்துகள் மூலமாக கோவைக்கு வருவதால் அங்கு அதிக அளவில் மக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பவ இடத்தில் போலீசாரும் குவிக்கப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

