

சினிமாவில் தனக்கென ஒரு பாதையையும், ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி, அரசியலில் தனி முத்திரை பதித்தவர் விஜயகாந்த்.. அவரது மறைவு திரையுலகினர் மட்டுமின்றி அவரது ரசிகர்கள், பொதுமக்கள் என பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் பலரும் அவரது நினைவுகள் குறித்து பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு அவருக்கு பத்மவிபூஷன் விருதையும் அறிவித்து உள்ளது.. இந்நிலையில் விஜயகாந்தின் வாழ்க்கையில் சுமார் நாற்பது வருடங்கள் பயணித்து விஜய காந்த் நண்பராகவும்,ஆலோசணைகள் வழங்குபராகவும் இருந்த கோவையை சேர்ந்த எண்கணித நிபுணர் கே.கே.பாலசுப்ரமணியன் நமக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
ஆரம்ப காலத்தில் குணியமுத்தூரில் வசித்து வந்ததாக கூறிய அவர், 1979 ஆம் ஆண்டு விஜயகாந்த் தம்மை முதன் முதலாக சந்தித்ததை நினைவு கூர்ந்தார். ஆரம்ப கால விஜயகாந்தின் படங்கள் அவருக்கு கை கொடுக்காத நிலையில், திருப்பூரில் நண்பர் ஒருவர் கூறிய ஆலோசணையை ஏற்று தம்மை சந்திக்க வந்த விஜயகாந்தின் பெயரை சிறு மாற்றம் செய்து கொடுத்ததாக கூறினார். இதனை தொடர்ந்து விஜயகாந்த்தின் சினிமா வாழ்க்கை தொடர்ந்து ஏறு முகமாக இருந்ததாகவும், அன்று முதல் எங்களது நட்பு தொடர்ந்த்தாக நினைவு கூர்ந்தார். ராவுத்தரும், விஜயகாந்தும் ஒரே அறையில் இருந்த போது அவர்களது அறை எண்களை கூட மாற்ற தாம் கூறியதாக கூறிய அவர், அது மட்டுமின்றி அவரது தயாரிப்பு நிறுவனத்திற்கும் தாமே பெயரை சூட்டியதாகவும், இன்னும் கூடுதலாக அவரது அரசியல் கட்சியின் பெயரான தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் எனும் பெயர் தாம் தேர்ந்தெடுத்த பெயர் என தெரிவித்தார். விஜயகாந்தின் ஆலொசனைபடி அவர்,கொடுத்த 23 பெயர்களில் இந்த பெயர் தேர்வு செய்யப்பட்டதாக கூறிய அவர்,எண் கணிதத்தில் அவருக்கு ஆர்வம் இருந்ததாக கூறினார். அவருக்கு ராசியான எண்ணான ஐந்தாம் நம்பரிலேயே அனைத்தும் வரும் வகையில் அமைக்கப்பட்டதாகவும், கூறினார். அவர் புகழின் உச்சியில் இருந்த போது கூட தாம் அவரை எளிதில் சந்திக்க முயன்றதை நினைவு கூர்ந்த அவர், விஜயகாந்தின் இழப்பு அனைவருக்கும் பெரிய இழப்பு என கண்ணீர் மல்க கூறினார்.

