• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பரந்தூர் விமானநிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் உண்ணாவிரதம்..!

Byவிஷா

Jan 27, 2024

காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் 2வது சர்வதேச புதிய விமானநிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராம மக்கள், கிராமசபைக் கூட்டத்தைப் புறக்கணித்ததுடன், உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதை விரிவாக்கம் செய்வதற்கு உண்டான இடவசதிகள் இல்லாத காரணத்தால், 2-வது சர்வதேச புதிய விமான நிலையம் தொடங்குவதற்கு செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நான்கு இடங்கள் பரிந்துரை செய்யப்பட்டன. அதில், காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தை அடுத்த ஏகனாபுரம் கிராமத்தை மையப் பகுதியாக வைத்து சர்வதேச புதிய விமான நிலைய அமைக்க, அக்கமாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம், நாகப்பட்டு, நெல்வாய், மகாதேவிமங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கர் விளை நிலங்கள் எடுக்க திட்டமிடப்பட்டது.
இந்த பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரத்தை மையமாக வைத்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் 550-வது நாளை எட்டியுள்ளது. இந்தப் போராட்டத்தையொட்டி ஏகனாபுரம் கிராமத்தில் 13 கிராமத்தைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர்.