ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கிளாம்பாடி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள புஞ்சை கிளாம்பாடி கிராமத்தில் வி.வி.ஸ்னாக்ஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலை சட்டத்திற்கு புறம்பாக எந்த விதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் ஆபத்தான முறையிலும், சுகாதாரமற்ற முறையிலும் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஏற்படும் கரும் எண்ணெய் புகையினாலும் வாடையாலும் காற்று மிகவும் மாசுபட்டு சுவாசிக்க தகுதியற்றதாக இருக்கிறது. இந்த காற்றினை நாங்கள் தொடர்ந்து சுவாசித்து வருவதால் பல்வேறு சுவாச பிரச்சனைகள் எங்களுக்கு ஏற்படுகிறது. இதனால் நாங்கள் குடியிருக்க முடியாமல் தவிக்கிறோம். மேலும் பல வீடுகளின் தகரக் கூரை துருப்பிடித்து எண்ணெய் பசையுடன் இத்து கீழே விழுகிறது. வீட்டில் பயன்படுத்தப்படும் வீட்டு உபயோகப் பொருட்கள் மின்விசிறி போன்றவை சிதிலமடைந்து உள்ளது. தொழிற்சாலை இயங்கும் போது கிராமப்புறத்தில் உள்ள வீடுகளின் ஜன்னலை சாத்திக் கொண்டுதான் நாங்கள் உள்ளே இருக்கிறோம். இந்த தொழிற்சாலையின் அருகிலே நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அதில் பயிலும் குழந்தைகளுக்கு இந்த மாசு கரும்
புகையினால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தொழிற்சாலையில் எந்த விதமான தீ தடுப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல் கீற்று கொட்டாயில் மிகவும் அபாயகரமான எளிதில் தீப்பிடிக்கக்கூடிய சூழ்நிலையில் உள்ளது. எனவே மேற்படி தொழிற்சாலையின் மீது தகுந்த சட்டப்படியான நடவடிக்கை எடுத்து தரவேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.