

தேசியக் கொடியை சமூக ஊடகங்களில் முகப்பு சித்திரமாக வைப்பதும், விளம்பரம் செய்வதும்தான் தேசபக்தி என்று சிந்திப்பது அபத்தமானது, என்று மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி கூறினார்.
தேசபக்தி என்பது ஒரு விளம்பர பிரச்சாரம் அல்ல. இது நாட்டு மக்கள் அனைவருடனும் காட்டும் அன்பு. அதை அன்றாட வாழ்வின் மூலம் நிரூபிக்க வேண்டும் என்றார் அவர். மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் கேரளப் பயணத்தின் 100ஆவது ஆண்டு விழா மற்றும் மகாத்மா காந்தியின் வருகையின் 95ஆவது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக மகாராஜா கல்லூரியின் வரலாறு மற்றும் தொல்லியல்- கலாச்சார ஆய்வுகள் துறை ஏற்பாடு செய்த கருத்தரங்கில் துஷார் காந்தி புதனன்று பேசினார்.
அப்போது அவர் “தேசப்பற்று என்பது மதமாக மாற்றப்பட்டு வருகிறது. சிலர் தேசபக்தியை அரசியலாக்கவும் சடங்காக மாற்றவும் முயற்சி செய்கிறார்கள். சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் உள்ள தலைமுறைகள் நாட்டின் மீதான தங்கள் பொறுப்பை மறந்து வருகின்றன. முன்னோர்கள், தேவைக்கு அதிகமான தியாகம் செய்துவிட்டனர் எனவும், இப்போது அதை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள்” என்றார். அதேநேரம், புதிய தலைமுறை மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், பாகுபாடுகளை வளர்க்கும் நச்சு சக்திகளிடமிருந்து சாதி-மத-பாலின பாகுபாடுகளில் இருந்தும் நாட்டை விடுவிப்பதற்கான வலு புதிய தலைமுறைக்கு உள்ளது என்கிற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
