• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கும்பகோணத்தில் 75 வருடங்களாக கட்டப்படாத கட்சி அலுவலகம்

Byவிஷா

May 13, 2025

கும்பகோணத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகளாகியும் கட்ட வழியில்லை என கும்பகோணம் காங்கிரஸார் புலம்பி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அழுத்தி அழுத்தி சொல்கிறார். ஆனால், யதார்த்தம் அப்படி இல்லை என்று சொல்லும் கும்பகோணம் காங்கிரஸார், அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகளாகியும் கட்டப்படாமல் கிடக்கும் கும்பகோணம் நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை அதற்கு எவிடென்ஸாக காட்டுகிறார்கள்.
சுமார் 75 வருடங்களுக்கு முன்பு, மருத்துவர் மகாலிங்கம் என்பவர் கும்பகோணம் நகர காங்கிரஸ் கமிட்டிக்கு அலுவலகம் கட்டுவதற்கான முயற்சியில் இறங்கினார். இதற்கான நிதியைத் திரட்டுவதற்காக பொருட்காட்சி நடத்தியவர், அதில் சேர்ந்த நிதியைக் கொண்டு 1950-ல் கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சன்னிதி தெருவில் சுமார் 3 ஆயிரம் சதுர அடி இடத்தை வாங்கினார். அத்தோடு அந்த முயற்சி கிடப்பில் போனதால், கட்சி அலுவலகம் கட்டுவதற்காக வாங்கப்பட்ட இடமானது ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. ஒருகட்டத்தில், காங்கிரஸார் பெருமுயற்சி எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த இடத்தை மீட்டனர்.
இதையடுத்து, மீண்டும் கட்சி அலுவலகம் கட்டும் முயற்சியில் இறங்கிய கும்பகோணம் காங்கிரஸார், 2022 ஏப்ரல் 24-ல் அப்போதைய மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, கே.வீ.தங்கபாலு உள்ளிட்டோரை அழைத்து வந்து கட்சி அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டினர். இது நடந்து மூன்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கட்டிடம் கட்டுவதற்கான எந்த முகாந்திரமும் தெரியவில்லை. அடிக்கல் நாட்டிய போது வைத்த கல்வெட்டும் கேட்பாரற்று மூலைக்குப் போய்விட்டது. இதனிடையே, கட்சி அலுவலகம் கட்டுவதற்காக சிலர் வசூல்வேட்டை நடத்தி வளமானதாகவும் சர்ச்சை வெடித்து அடங்கியது.
இந்த நிலையில், கட்சி அலுவலகம் கட்டுவதற்காக வாங்கப்பட்ட இடத்தை டெல்லி காங்கிரஸ் தலைமை கையகப்படுத்தி உடனடியாக அந்த இடத்தில் கட்சி அலுவலகத்தைக் கட்டிமுடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கும்பகோணம் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் ஐயப்பன் சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு அனுப்பி இருக்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐயப்பன்,
“கும்பகோணம் ஒரு காலத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. பிற்பாடு பல்வேறு காரணங்களால் காங்கிரஸ் இங்கு கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்துவிட்டது. எஞ்சி இருக்கும் எங்களைப் போன்ற சிலரால் இன்னமும் இந்தப் பகுதியில் காங்கிரஸ் உயிர்ப்போடு இருக்கிறது.
கட்சி அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட நாளிலேயே நன்கொடை வசூலிக்கப்பட்டு அதைக் கொண்டு அந்த இடத்தில் தற்காலிக ஷெட் அமைக்கப்பட்டது. ஆனால், அதைத் தவிர வேறெந்த வேலையும் அதன் பிறகு நடக்கவில்லை. மீண்டும் அந்த இடம் தனியார் ஆக்கிரமிப்புக்குள் போய்விடக் கூடாது என்பதற்காகவே அந்த இடத்தை கைப்பற்றி கட்சி அலுவலகத்தைக் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோனியா, ராகுல், கார்கே உள்ளிட்டோருக்கு கடந்த 21-ம் தேதி மனு அனுப்பினேன்.
அத்துடன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, கே.வீ.தங்கபாலு மற்றும் மேலிட பார்வையாளர்கள் கிரிஷ் சோடங்கர், சூரத் ஹெக்டே ஆகியோரைச் சந்தித்து அவர்களிடமும் இது தொடர்பாக மனு அளித்தேன். அவர்களும் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். சொன்னபடி அவர்கள் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கையை உடனே எடுத்தால் தான் கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்ட முடியும். இல்லாவிட்டால் கட்சியின் நிலைமை இன்னமும் மோசமாகிவிடும்” என்றார்.
கட்சி அலுவலகத்தை கட்டிமுடிப்பதில் என்ன பிரச்சினை என கும்பகோணம் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மிர்சாவூதீனிடம் கேட்டதற்கு, “காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாகவே கட்சி அலுவலகம் கட்டப்படாமல் கிடக்கிறது. விரைவில் மாநகர நிர்வாகிகளை அழைத்துப் பேசி கட்சி அலுவலகத்தை கட்டி முடிப்போம்” என்றார்.
தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டி.ஆர்.லோகநாதனோ, “அந்த இடத்தில் கட்சி அலுவலகம் கட்ட 33 ஆண்டுகளுக்கு முன்பே ஜி.கே.மூப்பனார் அடிக்கல் நாட்டினார். அப்போதும் கட்டிடம் கட்டப்படவில்லை. அடுத்ததாக 2022-ல் மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், கட்டிடம் கட்டுவதற்கான நிதியை யாரும் தரவில்லை. அதனால் தேக்கம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
இன்றைக்கு அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம், “நாளைய முதல்வர் நாங்கள் தான்” என மார்தட்டுகிறார்கள். ஆனால் ஒரு காலத்தில் தமிழகத்தையே ஆண்ட காங்கிரஸ், கட்சிக்கு அலுவலகம் கட்டுவதற்கு திரும்பத் திரும்ப அடிக்கல்லை மட்டுமே நட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் தான் கூட்டணி ஆட்சி என்று சொல்வதற்குக் கூட இப்போது கூச்சப்பட்டு நிற்கிறது காங்கிரஸ்!