சாத்தூர் அருகே திமுக அமைச்சர் நிகழ்ச்சிகளில் சென்ற இடமெல்லாம் அமைச்சர் முன்னாலேயே கட்சி நிர்வாகிகள் மோதல் நடந்தது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மற்றும் நத்தத்துப்பட்டி பகுதிகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அங்கன்வாடி மையம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வந்திருந்தார். அப்போது திமுகவை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் அமைச்சர் முன்னாலேயே ஒருவருக்கொருவர் தங்களை மதிக்கவில்லை தகவல் கூறவில்லை என்று கூறி, பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் நத்தத்துப்பட்டி கிராமத்தில் அமைச்சர் முன்பாக உள்ளூர் கட்சி நிர்வாகிகள் தான் பெரிதா? அல்லது அவன் பெரிதா? என கோபத்துடன் முட்டிக் கொண்டு விவாதம் நீண்ட நேரம் நடந்தது. அப்போது நான் போகும் பாதையில் தான் அமைச்சர் வர வேண்டும் என காரசார விவாதமும் நடைபெற்றது.
அப்போது அமைச்சர் செய்வதறியாது திகைத்து நின்றார். பின்னர் கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பும் ஏற்பட்டது.