• Sat. May 4th, 2024

அடுத்து பாராளுமன்றமும் வசமாகும்- கே.எஸ்.அழகிரி கருத்து

ByA.Tamilselvan

May 13, 2023

கர்நாடகத்தில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதும் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டனர். மாநில நிர்வாகிகள் சுமதி அன்பரசு, தளபதி பாஸ்கர், சிரஞ்சீவி, மாவட்ட தலைவர் சிவராஜ சேகரன் உள்ளிட்டோர் முன்னிலையில் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கினார்கள். தேர்தல் வெற்றி பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது..
கர்நாடகத்தில் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெறும் என்பதை தேர்தல் பிரசாரத்தின் போதே உணர்ந்தோம். ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி தந்துள்ளது. அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அல்ல. மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கத்தான் ராகுல் காந்தி தன்னை வருத்தி அந்த நடைபயணத்தை மேற்கொண்டார். அதன் பலன்தான் இப்போது கர்நாடகத்தில் கிடைத்திருக்கும் வெற்றி.
மக்கள் பா.ஜனதா மீதான நம்பிக்கையை இழந்து விட்டார்கள். கடந்த 7, 8 ஆண்டுகளில் வளர்ச்சியை நோக்கிய அரசியலை பா.ஜனதா முன்னெடுக்கவில்லை. எதிர்மறையான அரசியலை, சின்ன சின்ன பிளவுகளை மையப்படுத்தி அரசியல் செய்தார்கள். அது ஆரம்பத்தில் வெற்றியை கொடுத்தாலும் காலப்போக்கில் வெற்றி பெறாது என்பதை ராகுல் உணர்ந்தார். அதனால்தான் காந்திய வழியில் அதிகாரத்தை நோக்கிய அரசியல் இல்லாமல் மக்களிடையே ஒற்றுமையை நோக்கிய அரசியலை கையில் எடுத்தார். அதன் முதல் வெற்றிதான் இது. நாட்டில் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி எல்லாவற்றிலும் மோடி அரசு தோற்று விட்டது. விலைவாசி உயர்வும், வரி விதிப்பும் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த நெருக்கடியில் இருந்து நாட்டையும், மக்களையும் ராகுலால்தான் காப்பாற்ற முடியும் என்று மக்கள் உணர்ந்து விட்டார்கள். இந்த வெற்றிக்கு மல்லிகார்ஜூன கார்கே மிகப்பெரிய தூணாக விளங்கினார். ராகுலின் இளமை வேகம். கார்கேவின் முதுமை அனுபவம் ஆகிய இரண்டும் வெற்றிக்கு முக்கிய காரணம். மக்கள் பா.ஜனதாவை நிராகரிக்க தொடங்கி விட்டார்கள். அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் பாராளுமன்றமும் காங்கிரஸ் வசமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *