தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக அங்குள்ள மக்கள் தாங்கள் குடியிருந்த பகுதிகளில் இருந்து வெளியேறி திருமண மண்டபம் மற்றும் தனியா அமைப்புகள் ஏற்படுத்தி கொடுத்த பகுதிகளிலும் தங்கி இருந்தனர். மேலும் சிலர் உணவு கிடைக்காமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். இந்த நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அதிமுகவினரை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க அறிவுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் ராஜு வழிகாட்டுதல் படி, பரவை பேரூராட்சி தலைவர் கலாமீனா ராஜா மற்றும் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கினார். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தனர்.