

ஆம்பூர் அருகே தூய்மைப் பணியாளர்களுக்கு பாத பூஜை செய்து மாலை அணிவித்து துப்புரவுப் பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் நேற்று தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம், வடபுதுப்பட்டு ஊராட்சியில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவராக ஜெயலட்சுமி (42) என்பவர் வெற்றிபெற்றார். கூலி வேலை செய்து வந்த ஜெயலட்சுமியை ஊராட்சி மன்ற தலைவராக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வாக்களித்து தேர்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தனது பணிகளை ஜெயலட்சுமி நேற்று தொடங்கினார்.
ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிந்து வரும் 15 பேரை வரவழைத்தார். அவர்களுக்கு மாலை அணிவித்து, அவர்களது பாதங்களுக்கு தண்ணீர் ஊற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து சிறப்பு பாதபூஜை செய்தார். பிறகு, திருப்பத்தூர் மாவட்டத்திலேயே தூய்மையான ஊராட்சியாக வடபுதுப்பட்டு ஊராட்சி திகழ வேண்டும்.அதற்காகவே தங்களது பாதங்களை தொட்டு பாத பூஜை செய்துள்ளேன். எந்த ஒரு ஊராட்சியாக இருந்தாலும், அங்கு அர்ப்பணிப்போடு பணி செய்பவர்களின் தூய்மைப் பணியாளர்களே முதன்மையாக உள்ளனர். எனவே, தான் இப்படி ஒரு சிறப்பு உங்களுக்கு செய்யப்பட்டுள்ளது.இதைக்கேட்ட தூய்மைப் பணியாளர் நெகிழ்ச்சியடைந்தனர்.
பெண் தூய்மைப்பணியார்கள் கண்ணீர் சிந்தி, தங்களது அன்றாடப்பணிகளை சிறப்பாக செய்வோம் எனக்கூறினர்.ஊராட்சி மன்ற பெண் தலைவர் தூய்மைப்பணியாளர்களுக்கு பாத பூஜை செய்த காட்சி சமூக வலைதளங்களில் நேற்று வேகமாக பரவி வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்தது.