
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை திரும்பப் பெற்றுள்ள நவ்ஜோத் சிங் சித்து, ”மாநிலத்தில் புதிய அட்டர்னி ஜெனரல் நியமிக்கப்பட்ட பின் தான், தலைவராக பொறுப்பேற்பேன்,” என, நிபந்தனை விதித்துள்ளார்.பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
பஞ்சாப் முதல்வராக அமரீந்தர் சிங் இருந்த போது, அவருக்கும், மாநில முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் மோதல் ஏற்பட்டது. சித்துவை சமாதானப்படுத்தும் வகையில் அவரை மாநில காங்கிரஸ் தலைவராக கட்சி தலைமை நியமித்தது. அதிருப்தியடைந்த அமரீந்தர் சிங், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின், காங்கிரசிலிருந்து விலகி புதிய கட்சியையும் துவங்கியுள்ளார். அமரீந்தர் ராஜினாமாவுக்கு பின், சரண்ஜித்சிங் புதிய முதல்வராக பதவியேற்றார்.
ஆனாலும், மாநில அட்டர்னி ஜெனரலாக ஏ.பி.எஸ்.தியோலும், பஞ்சாப் மாநில டி.ஜி,பி.,யாக சகோடாவும் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த சித்து, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இவரது ராஜினாமாவை, கட்சி தலைமை ஏற்கவில்லை. இதற்கிடையே, அட்டர்னி ஜெனரல் பதவியை ராஜினாமா செய்வதாக தியோல் அறிவித்தார். இந்நிலையில், நவ்ஜோத் சிங் சித்து நேற்று கூறியதாவது:பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை திரும்பப் பெற்றுள்ளேன். எனினும் புதிய அட்டர்னி ஜெனரலை அரசு நியமித்த பின் தான், மாநில காங்., அலுவலகத்துக்குள் சென்று, தலைவராக பொறுப்பேற்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
