• Fri. Apr 26th, 2024

வைகை அணையில் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை. ஒரே ஆண்டில் 3வது முறையாக முழுக்கொள்ளவை எட்டுகிறது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இன்று முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் வரலாற்றில் ஒரே ஆண்டில் 3வது முறையாக அணை முழுக்கொள்ளவை எட்டுகிறது.

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டத்தின் விவசாயத் தேவைக்கும், குடிநீருக்கும் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை பிரதான நீர்ஆதாரமாக விளங்குகிறது. வைகை அணை கட்டப்பட்ட 64 ஆண்டுகளில் 5 முறை மட்டுமே ஒரே ஆண்டில் 2 தடவை நிரம்பியுள்ளது.

அதில் இந்த ஆண்டும் ஒன்று. இந்த ஆண்டின் ஜனவரி மாதம் மற்றும் ஜூன் மாதத்தில் வைகை அணை முழுக்கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து ஜூன் மாதம் முதல் 5 மாவட்ட விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகமான தண்ணீர் திறக்கப்பட்ட போதும் போதுமான நீர்வரத்து இருந்ததால் அணை நீர்மட்டம் 10 அடி மட்டுமே சரிந்தது. இந்நிலையில் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து கிடுகிவென அதிகரித்து வந்தது. இதன்காரணமாக வைகை அணை இந்த ஆண்டில் 3வது முறையாக முழுக்கொள்ளளவை எட்டும் நிலை உருவாகியுள்ளது.

தற்போது வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,168 கனஅடியாகவும், நீர்மட்டம் 66 அடியாகவும் உயர்ந்துள்ளது. பொதுவாக வைகை அணையில் 66 அடி எட்டும் போது முதல்கட்டக வெள்ள அபாய எச்சரிக்கையும், 68.50 அடியில் இரண்டாம் எச்சரிக்கையும், 69 அடியை எட்டும் போது 3வது எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் உபரியாக ஆற்றில் திறக்கப்படும். இந்நிலையில் தற்போது வைகை அணை 66 அடியை எட்டியுள்ளதால், வைகை அணையில் இருந்த முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அணையில் இருந்து 3 முறை அபாய ஒலி எழுப்பப்பட்டது. மேலும் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், ஆற்றில் குளிக்கவோ துவைக்கவோ கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளனர். வைகை அணை வரலாற்றில் ஒரே ஆண்டில் 3வது முறையாக முழுக்கொள்ளளவை எட்டுவதால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *