• Mon. Jun 5th, 2023

சோழபுரத்தில் பல்லவர் கால தவ்வை சிற்பம் கண்டுபிடிப்பு

ByA.Tamilselvan

May 20, 2023

தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரத்திம் காமராஜர் தெருவில் உள்ள காசி விசுவநாதர் கோவிலில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளரும் கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியருமான மு.கலா மற்றும் மு.செந்தில்குமார், அருப்புக்கோட்டை ஸ்ரீதர் போன்றோரின் கள ஆய்வில் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால தவ்வை என்ற மூத்ததேவி சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் கூறியதாவது, தவ்வை: பொதுவாகவே தவ்வை சிற்பம் இருக்கும் பகுதிகள் செல்வ செழிப்பாக இருக்கும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கிடைத்துவரும் தவ்வை சிற்பங்கள் பெரும்பாலும் நீர்நிலைகள் அருகிலேயே கண்டறியப்பட்டுள்ளன. தற்போது நாங்கள் கண்டறிந்த தவ்வை சிற்பமும் தூர்ந்து போன நீர்நிலை ஓரமாகவே கிடைத்துள்ளது.
இந்த சிற்பம் காசி விஸ்வநாதர் என்னும் சிவன் கோவிலில் காணப்படுகிறது. இந்த சிற்பம் மூன்றடி அகலமும் இரண்டடி உயரமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் நடுவில் தவ்வை என்னும் மூத்த தேவியும் வலது புறம் மகன் மாந்தனும் இடதுபுறம் மகள் மாந்தியும் சுஹாசன கோளத்தில் அமர்ந்தவாறு செதுக்கப்பட்டுள்ளது. இம்மூன்று திரு உருவங்களின் கைகளில் உள்ளவைகள் சற்றே சிதைந்து காணப்படுகிறது. இந்த சிற்பம் காணப்படும் காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபாட்டில் பல்லவர் கால விநாயகர், சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சங்கநிதி, பத்மநிதி, பிரம்ம சாஸ்தா சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாக வடிக்கப் பட்டதாகும். மேலும் இங்கு காணப்படும் பிரம்மசாஸ்தா சிற்மானது யானை மீது அமர்ந்த நிலையில் இருப்பது கூடுதல் சிறப்பாகும். இங்கு காணப்படும் ஒவ்வொரு சிற்பமும் பல்லவர்களின் கலை நேர்த்தியை இன்று வரை பறைசாற்றி வருகின்றன என்று அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *