புதிதாக தேர்வு செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் காஷ்மீர் விவகாரத்தை கையிலெடுத்துள்ளார்.பாகிஸ்தானின் 23ஆவது பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் தேர்வு செய்யப்பட்டார். அவர் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட சில மணி நேரங்களில் காஷ்மீர் பிரச்னைக்கு முடிவுகட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவுடன் நட்பு பாராட்டவே விரும்புகிறோம். ஆனால், காஷ்மீர் பிரச்னைக்கு முடிவுகட்ட வேண்டும். ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு சட்டத்தை இந்திய அரசு நீக்கியதை எதிர்த்து ராஜீய ரீதியில் எந்தவொரு நடவடிக்கையையும் இம்ரான் கான் எடுக்கவில்லை.
பிரதமர் மோடியும் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு வாழ்த்து கூறியதுடன், பிராந்தியத்தில் அமைதியையும், நிலைத்தன்மையையும் இந்தியா விரும்புகிறது என்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவரது பதவி பறிக்கப்பட்டது.
இம்ரான் கான் கட்சியான தெஹ்ரீக்-இ-இன்சாஃப் நாடாளுமன்றத்தில் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது. இந்தக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளரான முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியும் வெளிநடப்பு செய்தார்.
இதையடுத்து, எதிர்த்து போட்டியிட யாரும் இல்லாத நிலையில், ஷெபாஸ் தேர்வு செய்யப்பட்டார். 70 வயதாகும் ஷெபாஸ் பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக பதவி வகித்த அனுபவம் கொண்டவர் ஆவார்.
பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி, உடல் நலக் குறைவால் விடுப்பில் உள்ள நிலையில், செனட் தலைவர் சாதிக் சஞ்ச்ரானி ஷெரிஃபிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஷெரீபுக்கு ஆதரவாக 174 வாக்குகள் கிடைத்தன. இதனை முறைப்படி சபாநாயகர் அயாஸ் சாதிக் அறிவித்தார். 342 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் வேட்பாளர் குறைந்தது 172 உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டிருக்க வேண்டும். அதன்படி, ஷெரீஃப் வெற்றி பெற்றார்.
பாகிஸ்தானில் மூன்று முறை பிரதமராக பதவி வகித்த நவாஸ் ஷெரீஃபின் இளைய சகோதரர் தான் ஷெபாஸ் ஷெரீஃப். ஷெபாஸ் இந்தியாவுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு வந்தார். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்து பேசினார். பஞ்சாப் மாநிலத்துக்கும் சென்று அப்போதைய முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், துணை முதல்வராக இருந்த சுக்பீர் சிங் பாதல் ஆகியோரை சந்தித்தார்.
ஷெரீஃப் குடும்ப அரசியல் தலைவர்கள் இந்தியாவுடன் நல்லுறவை பேணுவதை விரும்புகின்றனர்.
இந்தியாவுடனான சிறந்த வர்த்தக உறவுகள் பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கும்.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பல சாலைகள், பாலங்கள், மேம்பாலங்கள் மற்றும் போக்குவரத்துத் திட்டங்களை செயல்படுத்தியதில் அளப்பரிய பங்காற்றியவர் ஷெபாஸ்.
புதிய பிரதமராக ஷெபாஸ் பொறுப்பேற்றுள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான அடுத்தகட்ட நடவடிக்கையை மத்திய அரசு கூர்ந்து நோக்கி வருகிறது.