கர்நாடகத்தில் மதம்சார்ந்த பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் லவ்ஜிகாத்துக்கு பதில் முஸ்லிம் பெண்களை இந்துக்கள் திருமணம் செய்வதற்கான ‘லவ்கேசரி’ எனும் பிரசாரத்தை தொடங்க வேண்டும் ஸ்ரீராமசேனை அமைப்பின் பிரமுகர் பேசியுள்ளார். கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு முஸ்லிம்கள் முழுஅடைப்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து முஸ்லிம் மக்களுக்கு எதிராக பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமீபத்தில் கடலோர கர்நாடக மாவட்டங்களில் கோவில்களில் கடைகள் நடத்த முஸ்லிம்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பிறகு ஹலால் இறைச்சிகளை வாங்க கூடாது என இந்துத்துவ அமைப்பினர் பிரசாரத்தை முன்னெடுத்தனர். மேலும் பழங்கள், பட்டுக்கூடுகளை இந்து வியாபாரிகளிடம் மட்டுமே விற்பனை செய்து, வாங்க வேண்டும் எனவும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.இவ்வாறு தொடர்ச்சியாக கர்நாடகத்தில் மதம் சார்ந்த பிரசாரங்களை இந்துத்துவ அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சில நாட்களுக்கு முன்பு தார்வாரில் அனுமன் கோவில் முன்பு முஸ்லிம்களின் கடைகள் சூறையாடப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சம்பவத்தில் போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் பொதுமக்கள் சட்டத்தை மதித்து அமைதியாக நடக்க வேண்டும் என அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் ஸ்ரீராமசேனை அமைப்பினர் சார்பில் ராமநவமி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஸ்ரீராமசேனை அமைப்பின் ராய்ச்சூர் மாவட்ட ஸ்ரீராமசேனை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராமசந்திரா ராமனகவுடாவுக்கு வீரவாள் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் விழாவில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ராய்ச்சூர் மாவட்டத்தில் ‘லவ் ஜிகாத்’ சம்பவங்கள் நடைபெற கூடாது. இனி ‘லவ் கேசரி’ சம்பவங்கள் தான் நடக்க வேண்டும். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். ‘லவ்ஜிகாத்’ முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். இதற்கு ‘லவ்கேசரி’ முக்கியமாகும். இதன்மூலம் இந்து இளைஞர்கள் முஸ்லிம் பெண்களை திருமணம் செய்து அவர்களது மதநம்பிக்கைகளை மாற்றம் செய்ய வேண்டும். ‘லவ்ஜிகாத்’ முறையில் நமது பெண்கள் ஏமாற்றம் செய்யப்படுகின்றனர். கோடைக்காலத்திலும் கருப்பு நிற புர்கா அணிய வலியுறுத்தப்படுகின்றனர். இதனால் நமது சகோதரிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சனைகளை யாரிடம் சொல்வது என அவர்கள் யோசிக்கின்றனர். இத்தகைய பிரச்சனைகளை சந்திக்கும் சகோதரிகளை எங்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.ராமசந்திரா ராமனகவுடாவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுதுது அவருக்கு ராய்ச்சூர் போலீசார் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து இதுவரை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.