• Fri. May 3rd, 2024

சிந்தனைத்துளிகள்

Byவிஷா

Aug 22, 2023

உதவும் குணம்

ஒருவன் பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்தான். தாகத்தால் உயிர் இழந்துவிடுவோமோ என எண்ணிய போது தூரத்தில் ஓர் குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.ரொம்ப கஷ்டப்பட்டு அந்த இடத்திற்கு அவன் சென்றான். அங்கு ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் மற்றும் அதன் அருகில் ஒரு ஜக்கில் குடிதண்ணீரும் இருந்தன.
ஒரு அட்டையில் எவரோ ஒருவர் எழுதி வைத்திருந்தார்கள். “ஜக்கில் இருக்கும் தண்ணீரை அந்தப் பம்ப்பில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு பின்னர் மறுபடியும் அந்த ஜக்கில் தண்ணீரை நிரப்பி விட்டுப்போகவும் என்று இருந்தது…”
அந்த பம்ப் மிக மிக பழையதாக இருந்தது. அது வேலை செய்யுமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது. அது வேலை செய்யவிட்டால் அந்த குடிதண்ணீர் வீணாகி விடும்.
அதற்குப் பதில் அந்த குடிதண்ணீரைக் குடித்து விட்டால் தாகம் தணியும் மேலும் உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் இருக்கும். அவன் யோசித்தான்.
குடிதண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது.
ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.
அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான்.
தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.
ஆம்.

நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது.
இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அடுத்தவருக்கும் ஒரு பயன்இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் இருப்பதில்லை.
நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற சுயநலமும், அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது.
“அடுத்தவரும் பயன் அடைய வேண்டும்” என்ற மனநிலையில் ஒவ்வொருவருக்கும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *