• Thu. Apr 25th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Sep 15, 2022

சிந்தனைத்துளிகள்

வாழ்க்கைச் சக்கரத்தில் துன்பம் என்ற துருப் பிடிக்கத் தான் செய்யும். அது சக்கரத்தை உருளச்செய்யும் பொருட்டு துணிவு என்ற எண்ணெயை அவ்வப்போது இடுவதோடு, நம்மைச் சார்ந்தவர்களுடைய சக்கரங்களுக்கும் இட்டால் தான் வாழ்க்கை என்ற வண்டி பழுதின்றி ஓடும் என்று, உருண்டோடும் வண்டிக்கு ஒப்பாக வாழ்க்கையை உருவகப்படுத்துவது சிறப்பு. 

இரும்பு என்றாலே துருப்பிடிக்கத் தானே செய்யும். மரம் என்றாலே கரையான் அரிக்கத்தானே செய்யும். அது போல வாழ்க்கை என்றாலே இன்பமும், துன்பமும் இரண்டறக் கலந்து தானே இருக்கும் என்ற உண்மையை உணர்ந்தோமென்றால், துன்பமும், இன்பமும் எதுவுமே நிரந்தரமல்ல, சக்கரம் போல சுழன்று, மாறி, மாறி வருவது தான் வாழ்க்கை என்ற சூட்சுமம் தெரிந்து கொண்டால், துன்பங்கள் நம்மைத் துரத்தாது.
உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா பெறற்பால
அனையவும் அன்னவாம் மாரி வறப்பின் தருவாரும் இல்லை,
அதனைச் சிறப்பின் தணிப்பாரும் இல் – நாலடியார்.
மழையைப் பொழிய வைக்கவோ, அதிகமாகக் கொட்டும் மழையை நிறுத்தவோ, வலிமையுள்ளவர்களால் கூட ஆகாது. அது போல வினைப் பயனால் வரக் கூடிய தீமைகளைத் தடுத்து நிறுத்தவோ, வர வேண்டிய நன்மைகளை வராமல் தடுக்கவோ யார் முயன்றாலும் முடியவே முடியாது என்று நாலடியார் கூறுகிறது. எனவே, நமது வினைப்பயனால் வந்த தீமை என்று துன்பங்களை ஏற்கும் பக்குவம் பெற்று விட்டால், துன்பம் அகன்றோடி விடும்.
மேலும், வரவேண்டிய நன்மைகளை யார் முயன்றாலும் தடுக்கமுடியாது என்று மனதில் ஆறுதல் கொண்டால் வாழ்க்கைச் சக்கரம் வளமான பாதையை நோக்கிப் பழுதின்றி ஓடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. மேலும் சேவை, தியாகம் செய்ய ஆர்வமுள்ளவர்கள், சொந்த சுகங்களைப் பற்றி எண்ணிக் காலத்தை வீணடிக்க மாட்டார்கள்.
ஏனெனில் உலகப்பிரகாரமான வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டவர்களாலும், சொந்த பந்தங்களின் பாசப் பிணைப்பில், பற்றுடன் இருப்பவர்களாலும், சேவை, தியாகம் போன்ற சமூக நலனுக்கான ஆக்கப் பூர்வமான சிந்தனைகளோடு செயல்பட இயலாது. தன் சுக துக்கங்களையும், தன்னைச் சார்ந்தோரின் குண நலன்களைப் பற்றியும், பற்றற்று இருப்பவரால் மட்டுமே சேவையில் திறம்பட ஜொலிக்க முடியும். விருப்பு, வெறுப்பு, வெற்றி, தோல்வி, துக்கம், சந்தோஷம் போன்ற நிலைகளில் தன்னிலையில் பிறழாதவர்களால் தான், தங்களையும் பேணிக் காத்து, மற்றவர்களுக்கும் மகிழ்வுடன் உதவிசெய்து சந்தோஷமாக இருப்பார்கள் என்பது மகாத்மா காந்தியின் வரிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *