இந்தோனேசியாவில் நடந்த பிரதமர் மோடி-ஜின்பிங் சந்திப்பின்போது எல்லை நிலவரம் பேசப்பட்டதா என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார். அதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்தது.
மாநிலங்களவையில், துணை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அதில், காங்கிரஸ் உறுப்பினர் ப.சிதம்பரம் பேசியதாவது:- இந்தோனேசியாவில் பாலி தீவில் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் உரையாடும் வீடியோவை பார்த்தேன். அப்போது, இந்திய-சீன எல்லை நிலவரம் குறித்து பேசப்பட்டதா? இவ்வாறு ப.சிதம்பரம் கூறியதற்கு பா.ஜனதா எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். துணை மானிய கோரிக்கை விவாதத்தை அவர் திசைதிருப்புவதாக குற்றம் சாட்டினர். இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. பா.ஜனதா உறுப்பினர் நரசிம்மராவ், 110-வது விதியின்கீழ் ஆட்சேபனை தெரிவித்தார்.