மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தலைக்காயம் அடைந்த 16 வயது சிறுவன் மூளைச் சாவடைந்ததால் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதனால் ஐந்து நபர்கள் பயனடைந்துள்ளனர். இறந்த சிறுவனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

மதுரை மாநகர் வைத்தியநாதபுரம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் யாககண்ணன் (வயது 16), கடந்த ஏப்ரல் 2-ம் தேதி தனது வீட்டில் மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனால் முதுகு தண்டிலும் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது இதனை அடுத்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அவசர விபத்து சிகிச்சைப் பிரிவில் 108 ஆம்புலன்ஸ் மூலம் உள்நோயாளியாக 03.04.2026 அன்று அதிகாலை 01.45 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். தலைக்காயப்பிரிவு 101 ICU வார்டில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் யாககண்ணன் 05.06.2026 அன்று காலை 09.25 மணியளவில் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டார். இதனை அடுத்து அவரது குடும்ப உறவினர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்தனர். இறந்த யாககண்ணனின் தந்தையார் சந்திரசேகரிடம் முறைப்படி ஒப்புதல் பெறப்பட்டது. கல்லீரல் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் கோயம்புத்தூரில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் திருநெல்வேலி கிட்னி கேர் சென்டருக்கும், கருவிழிகள் மற்றும் தோல் ஆகியவை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.
இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் கூறுகையில், இறந்த யாககண்ணனின் உடல் தீவிர விபத்து சிகிச்சைப் பிரிவில் உடற்கூராய்வுக்குப் பின் அரசு ராஜாஜி மருத்துவமனையின் நிர்வாகம் சார்பாக இறுதி மரியாதை செய்யப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் காவல்துறையின் மூலம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

மேற்கண்ட நபரின் உடல் உறுப்பு தானத்தால் ஐந்து நபர்கள் பயன் பெற்றுள்ளனர். உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு தமிழக அரசு சார்பாக இறுதி மரியாதை செய்வதற்காக மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் உடல் உரிய மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்டது. மேற்கண்ட நோயாளியின் உறவினர்கள் மற்றும் காவல் துறையினருக்கு அரசு இராசாசி மருத்துவமனை சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.



