• Sat. May 4th, 2024

சூராவளி பிரச்சார பயணத்தில் ஓ.பி.எஸ்; பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக ஆதரவுடன் பலாப்பழம் சின்னத்தில் இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் நேரில் சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். அவருடன் பாஜக நிர்வாகிகள் மாவட்ட தலைவர் தரணி முருகேசன், இ.எம்.டி.கதிரவன் ஆகியோர் உடனிருந்தனர். அதனைத்தொடர்ந்து திருவாடானை ஒன்றியத்துக்கு உட்பட்ட கே.சி.மங்களம், மங்கலக்குடி, ஆண்டாவூரணி, வெள்ளையாபுரம், ஓரியூர் மற்றும் பாண்டுகுடி உள்ளிட்ட பல பகுதிகளில் திறந்த வேனில் நின்று பலாப்பழம் சின்னத்துக்கு வாக்கு கேட்டார். தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது,

இராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட பாலாறு குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தி மாவட்ட மக்களின் தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்வேன். இராமநாதபுரம் என் மூதாதையர்கள் வாழ்ந்த ஊர் அதனால் இங்கு ஜெயித்துவிட்டு வேறெங்கும் போய்விட மாட்டேன். இங்கேயே தங்கி இருந்து மக்கள் பணி செய்வேன். இந்த தொகுதியில் பெயர் குழப்பத்தை ஏற்படுத்த ஐந்து பன்னீர்செல்வம்கள் உள்ளனர். நான் ஓ.பன்னீர்செல்வம் அதனாலயே எனக்கு முக்கனிகளில் சுவையுடைய பலாக்கனியை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அதை வெற்றிக்கனியாக்கி நம்மை எதிர்த்து போட்டியிடும் நவாஸ்கனியை செல்லாக்கனியாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் வாக்காளர்களாகிய உங்களுக்கு உள்ளது என்று பேசினார். கிராமங்கள் தோறும் மலர்களை தூவியும், ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் சிறப்பாக வரவேற்பு கொடுத்தனர். இதனிடையே திருவாடானை பகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் ஊருக்குள் வரவிடாமல் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோசங்கள் எழுப்பினர். முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணி சார்பாக திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *