• Wed. Dec 11th, 2024

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் ஓ.பி.எஸ் பெயர் நீக்கம்..!

Byவிஷா

Jun 27, 2022

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் நாளுக்கு நாள் பரபரப்பைக் கிளப்பி வரும் நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அடுத்த கட்ட நடவடிக்கையாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியுள்ளனர்.


நேற்று வரை நமது அம்மா நாளிதழின் பதிப்பில் நிறுவனர்கள் என்ற இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது. பொதுக்குழுவிற்கு பிறகு வெளியான பதிப்புகளிலும் இந்த நிலையே தொடர்ந்து வந்த நிலையில் இன்று வெளியான நாளிதழில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறாமல் எடப்பாடி பழனிசாமியின் பெயர் மட்டுமே நிறுவனர் என்ற இடத்தில் தனித்து இடம்பெற்றுள்ளது. அந்தவகையில், இன்று வெளியான நாளிதழ் முழுமையும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான கருத்துகளால் நிரப்பட்டுள்ளது. ஈபிஎஸ் தான் ஒற்றைத் தலைமை ஏற்க வேண்டும் என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டி, அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனின் பேட்டி ஆகியவையே முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக மாவட்டங்களில் உள்ள அதிமுக கட்சி அலுவலகங்களில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் படம் அகற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.