பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வருகிற 21ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் கூட்டியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தன்னை அறிவித்துக் கொண்டுள்ளார். இதை எதிர்த்து ஒபிஎஸ் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.அதில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக நான் (ஓபிஎஸ்) இருந்து வருகிறேன். எனது அனுமதி இல்லாமல் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அதனால் அந்த பொதுக்குழு செல்லாது, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டதும் செல்லாது என்று தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் தனது தலைமையிலான அதிமுகவை வலுப்படுத்த ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில வாரங்களாக அனைத்து மாவட்டங்களுக்கும், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளையும் புதிதாக நியமித்து வருகிறார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில், வருகிற 21ம் தேதி (புதன்)அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரி ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அணியினர் பொதுக்குழுவை கூட்டி தங்கள் பலத்தை நிரூபித்துள்ளனர். அதேபோன்று, ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் அதிமுக போட்டி பொதுக்குழுவை கூட்டி உண்மையான அதிமுக நாங்கள்தான் என்று நிரூபிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி, வருகிற 21ம் தேதி சென்னையில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பொதுக்குழு நடைபெறும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.