
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான செட் தகுதித் தேர்வுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் செட் தேர்வு நடத்தும் பொறுப்பு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த ஆண்டு செட் தேர்வுக்கான அறிவிப்பை சுந்தரனார் பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டது.
அதன்படி தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, சமூகவியல், உளவியல், பொது நிர்வாகம் உட்பட மொத்தம் 43 பாடங்களுக்கான செட் தகுதித்தேர்வு ஜுன் 3-ம் தேதி கணினிவழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று முதல் (ஏப்ரல் 1) தொடங்குகிறது.
விருப்பமுள்ள பட்டதாரிகள் www.msutnset.com என்ற இணையதளம் வழியாக ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம் பொதுப்பிரிவுக்கு ரூ.2500, பிசி, எம்பிசி, டிஎன்சி வகுப்புக்கு ரூ.2000, எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3-ம் பாலினத்தவர் கட்டணம் செலுத்த வேண்டாம். இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் செட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
