ஆப்பரேசன் டிஸ்ஆர்ம் (Operation Disarm ) சோதனையின் போது 2,512 ரவுடிகளை கைது செய்துள்ளதாகவும், அவர்களிடம் இருந்து 934 கத்திகள் மற்றும் 8 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தகவல் தெரிவித்துள்ளார்.
மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு தலைமையிலான சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
“2012 , 2013 ம் ஆண்டுகளில் நடந்த கொலை சம்பவங்களின் தொடர்ச்சியாக நெல்லையிலும் , திண்டுக்கலிலும் நடந்த பழி தீர்க்கும் கொலை சம்பவம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் நீதிமன்றங்களில் சரணடைந்தனர்.
மேலும், கடந்த 36 நேர ‘ஆப்பரேசன் டிஸ்ஆர்ம்’ சோதனையில் 2,512 ரவுடிகளை கைது செய்து, அதில் 733 ரவுடிகள் / கைதிகள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 934 கத்திகள் மற்றும் 8 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 1,927 ரவுடிகளிடமிருந்து நன்னடத்தை பத்திரம் பெறப்பட்டும் , கொலை குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளை சோதனையிட நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.
கொலை வழக்குகளின் மீது நீதிமன்ற விசாரணை துரிதப்படுத்தப்பட்டு தண்டனை உறுதி செய்யவும், தனிப்படை அமைக்க மாநகரங்களிலும் மாவட்டங்களிலும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் -சிந்து