• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ராமர் கோவில் திறப்பு : தமிழக கோவில்களில் ஒளிபரப்ப அனுமதி மறுப்பு.., பா.ஜ.க சார்பில் ரிட் மனு தாக்கல்..!

Byவிஷா

Jan 22, 2024

அயோத்தியில் இன்று ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை, தமிழக கோவில்களில் ஒளிபரப்ப அனுமதி மறுப்பதாக புகார் தெரிவித்து, பா.ஜ.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் குடமுழுக்கு விழா இன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி லட்சக்கணக்கான மக்கள், விஐபிக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் அயோத்தியில் குவிந்துள்ளனர். அதன்படி, ராமர் சிலை பிரதிஷ்டை விழா பிரதமர் மோடி தலைமையில் இன்று சுமார் பகல் 12.20 மணிக்கு நடைபெற உள்ளது.
அப்போது, ராமர் சிலையின் கண்களில் கட்டப்பட்டுள்ள மஞ்சள் துணி அகற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. முக்கிய பிரமுகர்கள் வருகையால் அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழல், இன்று ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெற உள்ள நேரத்தில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் உள்ளிட்டவைகள் செய்யப்படுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். ஆனால், சிறப்பு பூஜைகள் நடத்த தமிழக அரசு எந்த தடையும் விதிக்கவில்லை என்றும், பொய் செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்தது. இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் நிகழ்ச்சி உட்பட பல இடங்களில் எல்இடி திரை மூலமாக ராமர் கோயில் திறப்பு விழாவை அயோத்தியில் இருந்து நேரடியாக ஒளிபரப்ப மறுப்பதாக குற்றசாட்டை முன்வைத்து பாஜக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், ராமர் பெயரில் பூஜை, பஜனை, ஊர்வலம், அன்னதானம், அர்ச்சனை ஆகியவற்றுக்கு அனுமதிக்கக்கூடாது என்று காவல்துறைக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே இதனை, ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் ரிட் மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. சென்னையை சேர்ந்த வினோஜ் பன்னீர்செல்வம் என்பவர் பாஜக சார்பில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.