• Thu. May 2nd, 2024

ஊட்டி மலை ரயில் ரத்து : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..!

Byவிஷா

Dec 8, 2023

கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாளையம்-குன்னூர் – உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கிழக்கு திசை மாறுபாடு காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கோவையில் நேற்று நள்ளிரவு முதலே தொடர் கனமழை பெய்து வருகிறது. விடியவிடிய பெய்த மழையால் அப்பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. காலையிலும் மிதமான மழை பெய்தது.
ஆனாலும் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மழையில் நனைந்தபடியே பள்ளி சென்றுள்ளனர். நேற்று இரவில் தொடங்கிய கனமழை காலையில் ஓய்ந்து தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் உதகை, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. மலைப்பாதைகளில் பனிமூட்டம் நிலவுவதால் வாகனங்களை எச்சரிக்கையாக இயக்க வேண்டும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாளையம்-குன்னூர்-உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தண்டவாளத்தில் மண்சரிவு, பாறைகள் விழுவது இவைகளை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தேவை ஏற்பட்டால் உடனடியாக சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *