• Tue. Oct 8th, 2024

ராஜபாளையத்தில் மின் வேலியில் சிக்கி ஒருவர் பலி

ByKalamegam Viswanathan

May 22, 2023

ராஜபாளையத்தில் உள்ள விவசாய தோப்பில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தர நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். 36 வயதான இவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இவர் நேற்று மாடு மேய்த்துள்ளார். இரவில் வீட்டுக்கு செல்லும் போது 3 மாடுகளை காணவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே தனது நண்பர்கள் சிலரை உடன் அழைத்துக் கொண்டு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தோப்புகளில் மாடுகளை தேடியதாக தெரிகிறது. அப்போது ராஜபாளையம் நகராட்சி பின்புறம் அமைந்துள்ள கணேசராஜா என்பவரது தோப்புக்குள் சென்ற போது, வன விலங்குகளை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் உயர் மின்சாரம் பாய்ந்ததால் மாரியப்பன் உயிரிழந்ததாக கூறி, உடலை எடுக்க விடாமல் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் மின் வேலி அமைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாரியப்பனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்து வந்த வடக்கு காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது காவல் துறையினருக்கும், மாரியப்பனின் உறவினர்களுக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்ற காவல் துறையினர் உறுதியை ஏற்றுக் கொண்ட உறவினர்கள் போராட்டத்தை கை விட்டனர்.இதனை அடுத்து மாரியப்பன் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *