• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஜூலை 22ல் ‘மக்களைத் தேடி மேயர்’ திட்ட முகாம்..!

Byவிஷா

Jul 18, 2023

சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தில், ஜூலை 22ஆம் தேதி மக்களைத் தேடி மேயர் திட்ட முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி தாக்கல் செய்தி 2023-24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில் ‘மக்களை தேடி மேயர்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முதல்கட்டமாக, மக்களை தேடி மேயர் திட்டம், 2023 மே மாதம் 3-ந்தேதி வடசென்னையில் தொடங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினார். பின்னர் தொடர்ந்து ஒவ்வொரு மண்டலம் வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்தவாரம் அடையாறு மண்டலத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் வரும் 22ந்தேதி தண்டையார்பேட்டை மண்டலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, 2023-24 பட்ஜெட்டில், பொதுமக்களின் குறைகளைக் கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில், ‘மக்களைத் தேடி மேயர்’ திட்டத்தை அறிவித்தார். அதனடிப்படையில், இத்திட்டம் கடந்த மே 3-ம் தேதி ராயபுரம் மண்டலத்தில் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மே 31-ம் தேதி திரு.வி.க.நகர் மண்டலத்திலும், ஜூலை 5-ம்தேதி அடையாறு மண்டலத்திலும் ‘மக்களைத் தேடி மேயர்’ திட்டமுகாம்கள் நடத்தப்பட்டன. இவற்றில், சம்பந்தப்பட்ட மண்டலங்களில் உள்ள பொதுமக்களிடமிருந்தும் கோரிக்கை மனுக்கள்பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மக்களைத் தேடி மேயர் திட்டத்தின்கீழ், தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் வரும் 22-ம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 1 மணிவரை, அம்மண்டலத்துக்கு உட்பட்ட பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். எனவே, தண்டையார்பேட்டை மண்டலத்தில் வசிக்கும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, மின் விளக்கு, கழிப்பிடம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், சொத்துவரி மற்றும் தொழில்வரி, குப்பைகள் அகற்றம், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் மற்றும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் நேரடியாக வழங்கி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.