கடத்தல் வழக்கில் தலைமறைவு!
பிரபல நடிகை லட்சுமி மேனன் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
குட்டிப் புலி, கும்கி, கொம்பன், மருது உள்ளிட்ட படங்களில் லட்சுமி மேனனின் நடிப்புத் திறமையைப் பார்த்து வியந்தவர்கள் நாம்.
ஆனால் அதே லட்சுமி மேனன் மீது கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் தலைமறைவாக இருக்கிறார் என்ற செய்தி கேட்டு தமிழ் ரசிகர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
கொச்சியில் இளம் ஐடி ஊழியரை கடத்தி தாக்கியதாக நடிகை லட்சுமி மேனன் மற்றும் மூன்று பேர் மீது எர்ணாகுளம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடத்தப்பட்டு தாக்கப்பட்ட ஆலுவாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் அலியார் ஷா சலீம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே மூன்று குற்றவாளிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர், தற்போது தலைமறைவாக உள்ள லட்சுமி மேனன் விரைவில் பிடிபடுவார் என்கிறார்கள் போலீஸார்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மிதுன், அனீஷ் மற்றும் சோனமோல், இவர்கள் அனைவரும் கொச்சியைச் சேர்ந்தவர்கள், லட்சுமி மேனனின் நண்பர்கள்.
என்ன நடந்தது?
கடந்த ஆகஸ்டு 24 ஞாயிற்றுக் கிழமை இரவு 11 மணியளவில் கொச்சியில் உள்ள ஒரு பாருடன் கூடிய உணவகத்தில் லட்சுமி மேனன் தனது நண்பர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது லட்சுமி மேனன் குழுவினருக்கும் அலியார் ஷா சலீமின் நண்பர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் ஆகியிருக்கிறது. இருதரப்பிலும் தரக்குறைவான வார்த்தைகள் வீசப்பட்டன
பிரச்சினை முடிந்ததும் அவர்கள் பாரில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். அவர்களின் காரை லட்சுமி மேனன் -நண்பர்கள் குழுவினர் பின் தொடர்ந்தனர்.
கொச்சி வடக்கு ரயில்வே மேம்பாலம் அருகே அவர்களைத் தடுத்திருக்கிறார் லட்சுமி மேனன். அங்கு மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, லட்சுமி மேனனின் நண்பர் எதிர்தரப்பைச் சேர்ந்த ஒருவரை வலுக்கட்டாயமாக தங்கள் காரில் இழுத்துப் போட்டுக் கொண்டு பறந்தனர்.
அவர்கள் நள்ளிரவில் பரவூரில் உள்ள வெடிமாரா சந்திப்பில் அவரை இறக்கிவிடும் வரை காரிலேயே வைத்து அவரைத் தாக்கினர். அதன் பின் போலீசுக்கு தகவல் கிடைத்து சென்றோம்.
நாங்கள் உடனடியாக தாக்கப்பட்டவரை அங்கிருந்து அழைத்துச் சென்றோம், அவரது புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூன்று பேரைக் கைது செய்தோம். நடிகையின் தொலைபேசி அணைக்கப்பட்டுள்ளது, அவர் தலைமறைவாக உள்ளார். நாங்கள் அவரைத் தேடி வருகிறோம், அவர் கைது செய்யப்படுவார்” என்று வடக்கு காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடத்தல், வாய்மொழி துஷ்பிரயோகம், தவறான அடைத்து வைத்தல், தானாக முன்வந்து காயப்படுத்துதல், குற்றவியல் மிரட்டல் போன்ற பிரிவுகளின் கீழ் லட்சுமி மேனன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 140(2),126, 296,127(2),115(2), 351(2), 3(5) இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“லட்சுமி மேனன் உள்ளிட்டோர் குடிபோதையில் இருந்ததால் என் நண்பரிடம் கத்த ஆரம்பித்தனர். மேலும் மோசமடைவதைத் தவிர்க்க நாங்கள் உடனடியாக அவரை இழுத்து அந்த இடத்தை விட்டு வெளியேறினோம். இருப்பினும், அவர்கள் எங்களைப் பின்தொடர்ந்து, வடக்கு மேம்பாலத்தில் எங்கள் காரை மறித்து, அவர்களில் ஒருவர் எங்கள் காரை மோதத் தொடங்கினார். நான் வெளியே வந்து அவர்களை சமாதானப்படுத்த முயன்றபோது, அவர்கள் என்னைக் கடத்திச் சென்று தாக்கினர். நடிகை என் தொலைபேசியைப் பறித்து என்னைக் கடுமையாக வார்த்தைகளால் திட்டினார்” என்று புகார் கொடுத்த சலீமின் நண்பர்க்ள் மலையாள ஊடகங்களிடம் பேசியிருக்கிறார்கள்.
இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும்போது லட்சுமி மேன கைது செய்யப்பட்டிருக்கலாம்.
