• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

செம்பட்டி விடுதி கிராமத்தில் சாலை மறியல் செய்த உடன் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள்..,

Byமுகமதி

Aug 7, 2026

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை தாலுகா செம்பட்டி விடுதி கிராமம் வறட்சிக்கு இலக்காகிய ஒரு பகுதியாகும். ஒரு காலத்தில் விவசாய பூமியாக இருந்த இந்த கிராமம் தற்போது பல்வேறு காரணங்களால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் இங்கு குடிநீர்த் தட்டுப்பாடு அதிகம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஒரு கட்டம் வரை பொறுத்து பார்த்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்து பார்த்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கிராம மக்கள் மக்கள் பாதை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் தலைமையில் சாலை மறியல் செய்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த செம்பட்டிவிடுதி போலீசார் மற்றும் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். சமாதானம் அடையாத பொதுமக்கள் நடவடிக்கை எதுவாக இருந்தாலும் உடனே செய்து கொடுத்தால் தான் சாலை மறியலை கைவிடுவோம் இல்லை என்றால் சாலை மறியலை நாங்கள் கைவிட மாட்டோம் என்று உறுதியாக இருந்தனர்.

உடனடியாக ஊராட்சி ஒன்றிய பொறியாளர் மற்றும் அலுவலர்கள் வந்து அங்கிருந்த ஆழ்குழாய் கிணறுகளை பார்த்தபோது அவற்றில் தண்ணீர் போதிய அளவுக்கு இல்லை என்பதும் மோட்டார் வைத்து இறைத்தாலும் ஒரு குடத்தில் பிடிப்பதற்கு கூட தண்ணீர் வரவில்லை என்பதையும் அறிந்தனர். அதனால் அந்த ஊருக்குள் இருந்த ஆழ்குழாய் கிணறுகள் அனைத்தையும் எடுத்து பார்த்துவிட்டு புதிதாக ஒரு ஆழ்குழாய்க் கிணறு அமைத்துத் தருவதாக உறுதியளித்தனர். அதுவரை நாங்கள் சாலை மறியல் செய்வதைக் கைவிட மாட்டோம் என்று உறுதியாக இருந்ததால் புதிய ஆழ்குழாய்க் கிணறு அமைத்து அதில் இருந்து தண்ணீர் எடுத்து தரும் வரை டேங்கர் லாரிகளில் குடிதண்ணீர் கொண்டு வந்து தரப்படும் என்று உறுதி அளித்ததோடு மட்டுமல்லாது உடனடியாக இரண்டு டேங்கர் லாரிகளில் தண்ணீரும் கொண்டு வந்து கொடுத்தனர்.

அதன் பிறகு பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். என்ற போதிலும் விரைவில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். இதற்கு முன்னெடுப்பு செய்த மக்கள் பாதை அமைப்புக்கு கிராம மக்கள் சார்பில் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.