பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திரம் பதிய வருபவர்கள் அதிக நேரம் காத்திருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஆன்லைன் பத்திரப்பதிவு நடைமுறையை தொடங்கியுள்ளது இந்த நடைமுறையால் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வராமல் வீட்டில் இருந்தபடியே உரிய ஆவணங்களை ஆன்லைனில் பதிவு செய்து விரைவில் பத்திரங்களை பதிவு செய்ய உள்கட்ட வசதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆன்லைனில் பத்திரப்பதிவு நடைமுறையை அறிவித்தாலும் பதிவு செய்வதற்கான வசதிகளுடன் தனியார் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறக்க தமிழக அரசு அனுமதித்து சென்னையில் பல்வேறு இடங்களில் தனியார் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது இது தமிழகம் முழுவதும் உள்ள ஆவண எழுத்தாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதிய நடைமுறையால் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டதாகவும் ஆன்லைன் பத்திரப்பதிவு மூலமாக பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் எனவே பழைய நடைமுறையை அரசு செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு தமிழகம் முழுவதும் பத்திர நகல் எழுத்தாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆன்லைன் பத்திரப்பதிவு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவாளர் அலுவலக வாசலில் அமர்ந்துதங்களது அலுவலகங்களை பூட்டி ஆவண எழுத்தர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி, கருப்பு முக கவசம் அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழக அரசின் தனியார் மயமாக்கலை கண்டித்து அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஆவண எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர் .

பத்திர நகல் எழுத்தர்கள் போராட்டத்தால் திருப்பரங்குன்றம் பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் ஒரு கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.