• Thu. Feb 26th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

இரவு நேர மண் கடத்தல் தகவல் தெரிவித்த சமூக ஆர்வலரிடம் அதிகாரி சர்ச்சை பேச்சு!

ByPrabhu Sekar

Feb 26, 2026

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட மோட்டுர் ஊராட்சி பகுதியில், இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மண் கடத்தல் நடைபெற்று வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

கந்திலி அருகே உள்ள சின்னுராம் வட்டம் பகுதியில், அரசு அனுமதி இல்லாமல் அதிக அளவில் மண் எடுத்துச் செல்லப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். சமூக விரோதிகள் தொடர்ந்து லாரிகள் மூலம் இரவு நேரங்களில் மண் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த சட்டவிரோத நடவடிக்கையை கவனித்த அதே பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், கந்திலி வருவாய் ஆய்வாளர் ராஜேஷுக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்துள்ளார். அதற்கு பதிலளித்த அதிகாரி, “வண்டியை பின்தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறோம்” என முதலில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், பின்னர் இரவு நேரங்களில் தன்னிடம் அழைக்க வேண்டாம் என்றும், “அன் டைமில் ஏன் போன் செய்கிறீர்கள்” என்ற வகையில் கடுமையாக பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், மண் கடத்தலில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக பேசுவது போல அவரது உரையாடல் இருந்ததாக சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்த தொலைபேசி உரையாடலின் வாய்ஸ் ரெக்கார்டிங் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதனால் அதிகாரிகளின் செயல்பாடு குறித்து பொதுமக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.

மோட்டுர் ஊராட்சி பகுதியில் நடைபெறும் சட்டவிரோத மண் கடத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வருவாய் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்துமா என்பதற்கு அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.