• Tue. Apr 23rd, 2024

ஆளுநருடன் ஓபிஎஸ் – இபிஎஸ் சந்திப்பு… பின்னணி என்ன?

By

Aug 19, 2021

சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், பழனிசாமி உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகள் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது எடப்பாடி பழனிசாமியை சிக்க வைக்கும் நோக்கத்தோடு கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை திமுக கையில் எடுத்துள்ளதாக அதிமுகவினர் குற்றச்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து நேற்று சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது திமுக – அதிமுக இடையே வார்த்தை போர் வெடித்தது. எடப்பாடி பழனிசாமி பேசுவது எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் உள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அவையில் இருந்து வெளியேறிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வளாகத்திலேயே தரையில் அமர்ந்து கையில் பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பொய் வழக்கு போட்டு அதிமுகவை முடக்க முடியாது என்றும், இதுபோன்ற விவகாரங்களை சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று காலை 11 மணிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திடீரென சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் இபிஎஸ் – ஓபிஎஸ் புகார் மனு ஒன்றை அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதில் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் திட்டமிட்டு திமுக ரெய்டு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதிமுக மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை மீண்டும் விசாரித்து வருவதாகவும் திமுக மீது புகார் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *