• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனையொட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காரைக்காலில் இருந்து சுமார் 630 கி.மீ. தொலைவில் கிழக்கு-தென்கிழக்கேயும், சென்னையில் இருந்து சுமார் 670 கி.மீ. தொலைவில் கிழக்கு-தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம்-புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆந்திர கடலோர பகுதிகள், தமிழகம்-புதுச்சேரி கடலோர பகுதிகள், இலங்கை கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் காரணமாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.