• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இனி திருப்பதியிலே முன்பதிவு டோக்கன் – தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தகவல்

ByA.Tamilselvan

Oct 10, 2022

திருமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வசதிக்காக இனி திருப்பதியிலேயே பக்தர்களுக்கு தங்கும் அறைகளுக்கான முன் பதிவு டோக்கன் வழங்கப்படும் என்று தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். திருமலையில் உள்ள அன்ன மைய்யா பவனில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, பக்தர்களிடம் நிறை, குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், இங்கு வந்த பின்னர் தங்கும் அறைகள் கிடைக்காமல் அவதிப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இதற்கு தீர்வு காணும் வகையில், இனி திருப்பதியிலேயே பக்தர்களுக்கு தங்கும் அறைகளுக்கான முன் பதிவு டோக்கன் வழங்கப்படும். இதேபோன்று, வைகுண்டம் க்யூ காம்ப்ளக்சில் இரவு முழுவதும் தரிசனத்திற்காக காத்திருக்கும் சாமானிய பக்தர்கள், மறுநாள் காலை முதல் சுவாமியை தரிசிக்க, இனி தினமும் காலை 10 மணியில் இருந்து 12 மணி வரை சோதனை அடிப்படையில் விஐபி பிரேக் தரிசனம் அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. புரட்டாசி 3-வது சனிக்கிழமை மற்றும் தொடர் விடுமுறைகளால் பக்தர்கள் கூட்டம் தற்போது அலைமோதுகிறது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய 48 மணி நேரம் ஆகிறது. இதற்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும். அக்டோபர் 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை, ஹைதராபாத் என்.டி.ஆர். விளையாட்டு அரங்கில் ஸ்ரீவாரி வைபவ உற்சவம் நடத்தப்படும். டிசம்பரில் ஓங்கோல், ஜனவரியில் டெல்லியில் வைபவ உற்சவம் நடைபெறும்.
கடந்த செப்டம்பர் மாதம் 21.12 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அவர்கள் உண்டியல் மூலம் ரூ.122.19 கோடி காணிக்கை செலுத்தினர். 98.74 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டன. 44.71 லட்சம் பேருக்கு இலவச அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. செப்டம்பரில் 9.02 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். புத்தாண்டு காலண்டர்கள், டைரிகளை முதல்வர் ஜெகன்மோகன் வெளியிட்டார். இவை தற்போது தேவஸ்தான புத்தக விற்பனை மையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. அகமதாபாத் நகரில் ஏழுமலையான் கோயில் கட்ட குஜராத் அரசு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் அங்கு கட்டுமானப்பணிக்காக பூஜைகள் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.