• Tue. Apr 30th, 2024

இனி சிபிஎஸ்இ பள்ளிகளில் என்சிஆர்எப் நடைமுறை

Byவிஷா

Apr 12, 2024

வரும் 2024-25ஆம் கல்வியாண்டில் இருந்து, சிபிஎஸ்இயின் கீழ் செயல்படும் பள்ளிகளில், 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு என்சிஆர்எப் சோதனை முறையில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
என்.சி.ஆர்.எஃப். என்பது தொடக்கக்கல்வி முதல் பிஹெச்டி வரை மாணவ-மாணவிகள் பல்வேறு துறைகளில் ஈட்டிய ரேங்க் அல்லது மதிப்பெண்ணை ஒரே குடையின்கீழ் ஒருங்கிணைக்கும் கட்டமைப்பாகும். பள்ளிக்கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி என அனைத்தையும் ஒன்றிணைப்பதற்காக தேசிய கல்விக் கொள்கையின்கீழ் இந்தக் கட்டமைப்பு கடந்தாண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து இதற்கான வரைவு நெறிமுறைகளை சி.பி.எஸ்.இ.யும் ஏற்கெனவே வெளியிட்டது.
இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ.யின் கீழ் செயல்படும் பள்ளியின் முதல்வர்களுக்கு அந்த வாரியம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது..,
“பல்வேறு ஆலோசனைக்குழுக் கூட்டத்துக்குப் பின் என்.சி.ஆர்.எஃப்.பை நடைமுறைப்படுத்த மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. சமகாலத்தில் ஏற்படும் சவால்களை மாணவர்கள் சமாளிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் வரும் 2024-25 கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ.யின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 6,9 மற்றும் 11-ம் வகுப்புகளில் என்.சி.ஆர்.எஃப். சோதனை முறையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளி வகுப்பறைகளில் கற்பித்தல் மற்றும் கற்றல், ஆய்வக செயல்பாடுகள், விளையாட்டு, கலை, சமூகப் பணி சார்ந்த இயக்கங்களில் பங்குபெறுதல், தொழிற்கல்வி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் மாணவர்கள் பெறும் ரேங்க் அல்லது மதிப்பெண்ணை ஒருங்கிணைக்க வேண்டும். அவற்றை ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக சேகரித்து ஏபிஏஏஆர் எனப்படும் மாணவர் பதிவேட்டில் இணைத்தும் ‘டிஜிலாக்கரில்’ சேமித்தும் வைக்க வேண்டும். இது வகுப்பறையில் கற்கும் கல்வி முறைக்கு மாற்றாக திறனை மேம்படுத்தும் கற்றல் முறைக்கு வழிவகுக்கிறது” என தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *