• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கெஜ்ரிவால் மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

ByTBR .

Apr 16, 2024

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் வரும் 24ம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட புதிய மதுபான கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்த நிலையில் இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து இந்த விவகாரத்தில் அமைச்சராக இருந்த சத்தியேந்திர ஜெயின், அதேப்போன்று டெல்லி துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது வரையில் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் கடந்த மாதம் 21ம் தேதி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கு விவகாரத்தில் ஜாமீன் கோரியும், அதேப்போன்று அமலாக்கத்துறை கைது நடவடிக்கை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்துச் எய்ததை தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி,” இது நாடாளுமன்ற தேர்தல் நேரம் என்பதால் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்பான வழக்கை உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். குறிப்பாக அவர் முதல்வராக தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறார் என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக இந்த விவகாரத்தில் ஒரு வேலை அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தால் அவர்களது தரப்புக்கு அதிக காலக்கெடு வழங்க கூடாது என்று தெரிவித்தார். அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று கூறினார். இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,”அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை வரும் 24ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்கிறது. இதைத்தொடர்ந்து அதற்கு 26ம் தேதிக்குள் மனுதாரர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.