அரசு ஊழியர்கள் தவிர அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் கலைஞர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தேர்தல் முடிந்த ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என வாக்குறுதி கூறி ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் பிரச்சாரம் செய்தார்.
நாடாளுமன்ற தேர்தலின் பரப்புரைகள் சூடு பிடித்துள்ள நிலையில் பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளான தாஜ்நகர் பகுதியில் ஈரோடு பாராளுமன்ற திமுக வேட்பாளர் K.E பிரகாஷ் வாக்கு சேகரிக்கும் போது, பெண்களுக்கான கலைஞர் உரிமைத் தொகை எலக்சன் முடிந்து இரண்டு மாதம் கழித்து ஆகஸ்ட் மாதம் முதல் அரசு ஊழியர் தவிர அனைத்து மகளிர்க்கும் வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
மேலும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் டீசல், பெட்ரோல் விலைகள் 30 ரூபாய் வரை குறைக்கப்படும். இதனால் விலைவாசிகள் பெரிதளவில் கட்டுக்குள் வரும் எனவும், டீசல் விலை குறைந்தாலே அனைத்து பொருள்களின் விலை குறைந்து விடும் சிலிண்டர் ரூ.500க்கு கொடுக்கப்படும். இந்தத் தேர்தல் விலைவாசிகளை குறைப்பதற்கான தேர்தல் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்தால்
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு மகாலட்சுமி திட்டம் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும் என வாக்குறுதிகள் கொடுத்து பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக வேட்பாளர் KE பிரகாஷ், பிரச்சார வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வெயிலில் நின்று ஆரத்தி தட்டு வைத்து சோர்வுடன் நின்ற மூதாட்டிக்கு தனக்கு போடப்பட்ட பொன்னாடையை எடுத்து போர்த்தி வாக்குகளை சேகரித்தார்.
சிறுவர்களும், சிறுமிகளும் ஆர்வத்துடன் ஆரத்தி தட்டுகளுடன் வேட்பாளரை வரவேற்க நின்றனர். வேட்பாளர் பிரகாஷின் இந்த பிரச்சார அணுகுமுறைகள் மகளிர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.