• Wed. May 8th, 2024

ஓபிஎஸ்க்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் – தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

Byமதி

Nov 26, 2021

வருமான வரி பாக்கியாக ரூ.82 கோடி செலுத்துமாறு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையின்போது,முக்கிய டைரி ஒன்று அதிகாரிகளிடம் சிக்கியது. அதில் அந்த தொழிலதிபரிடம் பணம் வாங்கியவர்களின் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் உள்ளிட்டோரின் பெயர்களும் டைரியில் இருந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இதை அடிப்படையாகக் கொண்டு பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்துக்கு வருமானவரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 2015 – 16 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாயும், 2017 – 18 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 82 கோடியே 12 லட்சம் ரூபாயும் வரியாக செலுத்த வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நோட்டீஸில் மேல் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்கவும், அவற்றை ரத்து செய்யக்கோரியும் பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, வருமான வரித்துறையின் நோட்டீஸுக்கு தடை விதிக்க மறுத்தததோடு, வருமான வரித்துறையின் மதிப்பீட்டு உத்தரவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டது. மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி வருமானவரித்துறை உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *