வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்காதது வருத்தமளிக்கவில்லை என்று ரிஷப்பண்ட் தெரிவித்துள்ளார்.
வங்காள தேசத்துக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பொறுப்பாக விளையாடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 93 ரன் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். இதன் மூலம் அவர் 6-வது சதத்தை தவற விட்டார். ரிஷப்பண்ட் 6-வது முறையாக 90 ரன்னுக்கு மேல் அவுட் ஆகி உள்ளார். இந்த நிலையில் சதம் அடிக்க இயலாமல் போனது தனக்கு எந்தவித வருத்தத்தையும் ஏற்படுத்தவில்லை என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:- தனிப்பட்ட வீரராக நான் சாதனைகள் பற்றி சிந்திப்பது இல்லை. 3 இலக்கம் என்பது வெறும் நம்பர்தான். என்னைப் பொறுத்தவரை பெரும்பாலான நேரங்களில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாட முயற்சிக்கிறேன். சதம் அடித்து இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். அப்படி நடக்காவிட்டாலும் ஒன்றுமில்லை. அதற்காக வருத்தமும் படமாட்டேன். எனது பேட்டிங் நன்றாக அமைந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் என்னுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சிக்கலில் இருந்து மீட்டது மகிழ்ச்சி அளித்தது. இவ்வாறு ரிஷப்பண்ட் கூறியுள்ளார்.