• Sun. Sep 8th, 2024

வங்கதேசத்திற்கு எதிரான கடைசி
டெஸ்ட்: வெற்றி பெறுமா இந்தியா..?

இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது. வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யரின் பொறுப்பான ஆட்டத்தால் 314 ரன் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 94 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 87 ரன்னும் எடுத்தனர். இது வங்காளதேசம் முதல் இன்னிங்சில் எடுத்த ஸ்கோரை விட 87 ரன் கூடுதலாகும். வங்கதேச அணியின் கேப்டன் சகீப்-அல்-ஹசன், தஜி ஜூல் இஸ்லாம் தலா 4 விக்கெட் கைப்பற்றினார்கள்.
87 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன் எடுத்து இருந்தது. இன்று 3வது நாள் ஆட்டம் நடந்தது. 2-வது ஓவரிலேயே அஸ்வின் வங்காளதேச அணியின் தொடக்க ஜோடியை பிரித்தார். நஜிமுல் உசேன் 5 ரன்னில் அவரது பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அப்போது ஸ்கோர் 13 ஆக இருந்தது. 2-வது விக்கெட் டுக்கு ஜாகீர் ஹசனுடன், மொமினுல் ஹக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியையும் இந்திய பவுலர்கள் நிலைத்து நிற்கவிடவில்லை. ஸ்கோர் 26ஆக இருந்தபோது வங்காளதேச அணியின் 2வது விக்கெட் சரிந்தது. மொமினுல்ஹக் 5 ரன்னில் முகமது சிராஜ் பந்தில் பெவிலியன் திரும்பினார்.
3-வது விக்கெட்டுக்கு ஜாகீர்ஹசனுடன் சகீப்-அல்-ஹசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. 23.1-வது ஓவரில் 50-வது ரன்னை தொட்டது. இந்த ஜோடியை ஜெயதேவ் உனட்கட் பிரித்தார். சகீப்-அல்-ஹசன் 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த முஷ்பிகுர் ரகீம் 9 ரன்னில் அக்‌ஷர் படேல் வீசிய பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். வங்காளதேசம் 70 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்தது. மதிய உணவு
இடைவேளையின்போது அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 71 ரன் எடுத்து இருந்தது. நிதானமாக ஆடிய ஜாகிர் ஹசன் 51 ரன்களும், லித்தன் தாஸ் 73 ரன்களும் எடுத்து நம்பிக்கை அளித்தனர். நூருல் ஹசன், தஸ்கின் அகமது தலா 31 ரன்கள் சேர்க்க, வங்காளதேச அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். முகமது சிராஜ், அஷ்வின் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து இந்தியாவின் வெற்றிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 12 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் கே.எல்.ராகுல் 2 ரன்னிலும், புஜாரா 6 ரன்னிலும் வெளியேறினர். இதன்பின் ஷூப்மான் கில் அக்ஷர் பட்டேலுடன் ஜோடி சேர்ந்தார். ஆனால் சிறிது நேரத்திலே 7 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் ஷூப்மான் கில். அதன்பின்னர் வந்த விராட்கோலியும் வந்த வேகத்தில் சென்றார். இதனால் இந்திய அணி மூன்றாம் ஆட்ட நேர முடிவில் 45 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்துள்ளது. பின் வரிசையில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தவறும்பட்சத்தில் டெஸ்ட் தொடரை வங்கதேசம் சமன் செய்து விடும். முதல் டெஸ்டில் 188 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று இருந்தது. இந்த டெஸ்டிலும் வெற்றி பெறுவதன் மூலம் இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றுகிறது. வங்கதேசம் எளிதில் விட்டுவிடாது. அதனால் போட்டியில் இன்று விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *